Press "Enter" to skip to content

அக்டோபர் 6, 9-ந்தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

9 மாவட்டங்களில் அக்டோபர் 6, 9-ந் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பொது விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. ஆனால், சில மாவட்டங்களில் இருந்து புதிய மாவட்டங்கள் உதயமானதால் அந்த பிரிக்கப்பட்ட மாவட்டங்களிலும் புதிய மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.

அந்த வகையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை. தற்போது இந்த மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 6 மற்றும் 9-ந்தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது.

எனவே, குறிப்பிட்ட நாளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் 6-10-2021 மற்றும் 9-10-2021 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ள தமிழ்நாடு சாதாரண ஊரக உள்ளாட்சி தேர்தல்- 2021-ஐ முன்னிட்டு 6-10-2021 மற்றும் 9-10-2021 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளுக்கு மட்டும் பொது விடுமுறை விடப்படுகிறது. இது தொடர்பான அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »