Press "Enter" to skip to content

டெல்லியில் குவியும் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள்: பூபேஷ் பாகல் பதவிக்கு ஆபத்தா?

சத்தீஸ்கர் மாநில எம்.எல்.ஏ.-க்கள் டெல்லியில் குவிந்து வருவதால், அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் பதவிக்கு ஆபத்து ஏற்படலாம் என செய்திகள் உலாவருகின்றன.

பஞ்சாப் மாநில காங்கிரஸில் அமரீந்தர் சிங்கிற்கும், முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் மோதல் போக்கு நிலவி வந்தது. இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் அமரீந்தர் சிங், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து சரண் ஜித் சன்னி புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டு, அவரது தலைமையிலான மந்திரிசபையும் உருவாக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.-க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இதனால் பஞ்சாப் போன்ற நிலை ஏற்பட்டு முதலமைச்சராக இருக்கும் பூபேஷ் பாகல் மாற்றப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன

இந்த நிலையில் சத்தீஸ்கரில் பஞ்சாப் போன்ற சூழ்நிலை இல்லை என டெல்லி சென்றுள்ள சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரிஹாஸ்பதி சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து பிரிஹாஸ்பதி சிங் கூறியதாவது:-

7 முதல் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் டெல்லி வந்துள்ளனர். மொத்தம் 15 முதல் 16 எம்.எல்.ஏ.க்கள் டெல்லி வருவார்கள். நாங்கள் சத்தீஸ்கர் மாநிலத்திற்கான பொறுப்பாளர் பி.எல். புனியாவை சந்திக்க இருக்கிறோம். ராகுல்காந்தி பஸ்தார் பகுதிக்கு வர இருக்கிறார். எங்களுடைய மாவட்டத்திற்கும் வர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

மாநில முதல்வர் மாற்றுவதற்கான கேள்விக்கே இடமில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், அனைத்து எம்.எல்.ஏ.-க்கள் சத்தீஸ்கர் மக்கள் பூபேஷ் பாகல் செயல்பாட்டின் மீது திருப்தி அடைந்துள்ளோம். ஒரு தனிப்பட்ட மனிதர் திருப்பி அடைவதற்காக அரசாங்கத்தை சீர்குலைக்க முடியாது. பஞ்சாப் போன்ற சூழ்நிலை சத்தீஸ்கரில் நிலவவில்லை. அனைத்து எம்.எல்.ஏ.-க்கள், மந்திரிகள் ஒற்றுமையாக உள்ளனர். கட்சி மேலிடத்தின் ஆசி எங்களுக்கு உள்ளது.

இவ்வாறு  பிரிஹாஸ்பதி சிங் தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »