Press "Enter" to skip to content

காந்தி வகுத்த பாதை

வன்முறை மற்றும் போர்களால்தான் உரிமைகளைப் பெற முடியும் என்று பலரும் நினைத்திருந்த நேரத்தில், அகிம்சையால் அந்த வெற்றியைப் பெற்றுத் தந்தவர் காந்தியடிகள்.

காந்தி என்றால் அகிம்சை. அகிம்சை என்றால் காந்தி… அது தான் சரியானதாக இருக்கும். ஏனெனில் ஆங்கிலேயர்களை விரட்ட காந்தி அமைத்துக்கொண்ட பாதை, அதில் இருந்து பல இன்னல்கள் வந்தபோதும் வழுவாத நெறி ஆகியவைதான், காந்திக்கு ‘அகிம்சைவாதி’ என்ற அசைக்க முடியாத பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது.

“அகிம்சை என்பது வலிமையற்றவர்களின் ஆயுதம் அல்ல… வலிமையற்றவர்கள், வன்முறையைத்தான் தேர்வு செய்வார்கள். வலிமையானவர்கள் மட்டுமே அகிம்சையின் பாதையில் நடக்க முடியும். எதிரியை எழ முடியாமல் அடித்து வீழ்த்த வலிமை தேவையில்லை. எந்த தாக்குதலையும் சமாளித்து எழுந்து நிற்கவே வலிமை தேவை” -காந்தியின் இந்த வார்த்தைகள்தான், அவரது அகிம்சை போராட்டத்தின் அடிப்படை நாதம் என்பதை எவரும் மறுக்க முடியாது. இறுதியில் அவரது அந்த அசைக்க முடியாத வார்த்தையில் இருந்த நம்பிக்கைதான், இந்தியாவிற்கு சுதந்திரத்தைப் பெற்றுத்தந்தது.

அப்படிப்பட்ட மகாத்மா காந்தியின் பிறந்தநாள் அக்டோபர் 2-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த தினத்தை ‘சர்வதேச அகிம்சை தினம்’ என்று அறிவிக்க கோரி, 2007-ம் ஆண்டு ஜூன் 15-ந் தேதி ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு 142 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அந்தத் தீர்மானம் பொதுச்சபையில் நிறைவேறியதும், ‘அக்டோபர் 2-ந் தேதியை ஐ.நா. உறுப்பு நாடுகள் அனைத்தும், உலக அகிம்சை தினமாக கடைப்பிடிக்க வேண்டும்’ என ஐ.நா. சபை கேட்டுக்கொண்டது.

வன்முறை மற்றும் போர்களால்தான் உரிமைகளைப் பெற முடியும் என்று பலரும் நினைத்திருந்த நேரத்தில், அகிம்சையால் அந்த வெற்றியைப் பெற்றுத் தந்தவர் காந்தியடிகள். அவர் இந்த உலகத்தையே தங்களது கைகளுக்குள் அடக்க நினைத்த ஆங்கிலேயர்களை, தனது அறவழிப் போராட்டத்தின் மூலமாக விரட்டியடித்தவர். காந்தியின் இந்த போராட்டம் வெற்றிபெற்றதன் காரணமாகத்தான், அந்த நடைமுறையால் கவரப்பட்ட மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா ஆகியோரும் அகிம்சை வழியையே பின்பற்றி வெற்றிபெற்று காட்டினார்கள்.

கோபாலகிருஷ்ணன், 2-ம் ஆண்டு, எலக்ட்ரிகல்,
வெங்கடேஸ்வரா ஐ.டி.ஐ., காட்பாடி

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »