Press "Enter" to skip to content

உலக அமைதிக்கான புகைப்பட போட்டியில் பெங்களூரு சிறுமிக்கு சர்வதேச விருது

பாட்டியின் மடியில் தாய் உறங்கியதை படம் பிடித்து அதனை உலக அமைதிக்கான புகைப்பட போட்டிக்கு அனுப்பிய பெங்களூரு சிறுமிக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது. அந்த சிறுமிக்கு யுனஸ்கோ நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.

பெங்களூரு :

பெங்களூரு மல்லேசுவரத்தை சேர்ந்தவர் அரவிந்த் சங்கர். கணிப்பொறி என்ஜினீயர். அவரது மனைவி ரோஷினி. அவர்களது மகள் ஆத்யா (வயது7), ஹெப்பால் பகுதியில் உள்ள வித்யாநிகேதன் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். 4 வயதாக இருந்தபோது சிறுமி ஆத்யாவுக்கு செல்போனில் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் வந்தது. இதையடுத்து சிறுமி ஆத்யா தனது தாயாரின் கைபேசி மூலம் தன்னுடைய வீடு மற்றும் தாத்தா வீட்டில் தன்னை கவரும் அனைத்து விஷயங்களையும் புகைப்படமாக எடுத்து மகிழ்ந்தாள்.

சிறுமி புகைப்படங்களை மிக நேர்த்தியாக எடுத்தாள். அந்த புகைப்படங்கள், அவளது தந்தையை வெகுவாக கவர்ந்தது. அதனால் அரவிந்த் சங்கர், அந்த புகைப்படங்களை, இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பல்வேறு புகைப்பட போட்டிகளுக்கு அனுப்பி வைத்து வந்தார். ஒரு நாள் ரோஷினி கோடிசிக்கனஹள்ளியில் உள்ள பெற்றோர் வீட்டில் தனது தாயாரின் மடியில் படுத்தபடி ஓய்வு எடுத்தார். அதை அவரது மகள் ஆத்யா மிக அழகாக செல்போனில் படம் எடுத்தார். அது கருப்பு-வெள்ளை வண்ணத்தில் மிக இயல்பாக அமைந்தது.

அந்த புகைப்படத்தை அரவிந்த் சங்கர், மடியில் அமைதி என்ற தலைப்பிட்டு யுனஸ்கோ நடத்திய புகைப்பட போட்டிக்கு அனுப்பி வைத்தார். யுனஸ்கோ-ஆஸ்திரிய நாடாளுமன்றம் ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் “உலக அமைதி புகைப்பட விருது” என்ற பெயரில் புகைப்பட போட்டிகளை நடத்துகிறது. அவற்றுக்கு உலகம் முழுவதும் இருந்து அமைதியை மையமாக கொண்ட புகைப்படங்கள் வருகின்றன.

அந்த வரிசையில் குழந்தைகளுக்கான பிரிவில், ஆத்யாவின் புகைப்படம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. இந்த விருதை பெற ரோஷினி தனது மகள் ஆத்யாவுடன் கடந்த மாதம் (செப்டம்பர்) 21-ந் தேதி வியன்னாவுக்கு சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த விருதை ஆத்யா பெற்றார். அந்த விருதை பெற்று கொண்ட தாய்-மகள் கடந்த 1-ந் தேதி பெங்களூரு திரும்பினர். அந்த குழந்தைகளுக்கு விருதுடன் பரிசாக 1,000 யூரோவும் (இந்திய மதிப்புப்படி ரூ.86,398 ஆகும்) வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆத்யாவிடம் கேட்டபோது, “எனது தாயார் என்னுடைய பாட்டியின் மடியில் மிக அமைதியாக படுத்திருந்ததை கவனித்து அந்த புகைப்படத்தை எடுத்தேன். அந்த புகைப்படத்திற்கு சர்வதேச விருது கிடைத்திருப்பதாக என்னிடம் பெற்றோர் கூறினர். அதை என்னால் நம்பவே முடியவில்லை” என்றார். இத்தகைய அமைதி விருதை இந்தியாவில் இருந்து வேறு எந்த குழந்தையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிறுமி ஆத்யாவின் புகைப்பட திறனை யுனஸ்கோ நிறுவனம் வெகுவாக பாராட்டியுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »