Press "Enter" to skip to content

தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கான தடை நீட்டிப்பு?- இன்று ஆலோசனை நடத்துகிறது தேர்தல் ஆணையம்

தலைமை தேர்தல் கமி‌ஷன் இன்று 5 மாநில தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறது. பொதுக்கூட்டத்திற்கான தடை இன்றுடன் முடிவடைவதால் இது குறித்து விவாதிக்கிறது.

புதுடெல்லி:

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் முடிவடைகிறது.

இதில் உத்தரபிரதேசத்துக்கு மட்டும் மே மாதம் முடிவடைகிறது. மற்ற மாநிலங்களுக்கு மார்ச் மாத இறுதிக்குள் முடிவடைகிறது.

இதையொட்டி இந்த 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் தீவிர முயற்சியில் ஈடுபட்டது. ஒமைக்ரானால் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிநீதி மன்றம் அறிவுறுத்தியது.

ஆனாலும் திட்டமிட்டபடி தேர்தலை நடத்துவது என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்து தேர்தல் தேதியையும் சமீபத்தில் அறிவித்தது.

அதன்படி பிப்ரவரி 10-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி வரை தேர்தல் நடைபெறுகிறது. உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக (பிப் ரவரி-14) தேர்தல் நடக்கிறது.

மணிப்பூரில் 2 கட்டமாகவும் (பிப்ரவரி 27, மார்ச் 3), உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாகவும் (பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை) தேர்தல் நடக்கிறது. வாக்குகள் மார்ச் 10-ந்தேதி எண்ணப்படுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் 2 வார காலத்துக்கு தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்து இருந்தன. காணொலி வாயிலாக அவர்கள், வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டி வந்தனர்.

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக 5 மாநில சட்டசபை தேர்தலில் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோவுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 8-ந்தேதி தடை விதித்து இருந்தது. அந்த தடை இன்றுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்கள் வாயிலாக பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தன.

இந்த நிலையில் தலைமை தேர்தல் கமி‌ஷன் இன்று 5 மாநில தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறது. பொதுக்கூட்டத்திற்கான தடை இன்றுடன் முடிவடைவதால் இது குறித்து விவாதிக்கிறது.

பொதுக்கூட்டம், ரோடு ஷோவுக்கான தடையை நீட்டிப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »