Press "Enter" to skip to content

டெல்லி அனுமன் ஜெயந்தி ஊர்வல வன்முறை குறித்து விசாரிக்க குழு அமைப்பு- உள்துறை மந்திரி அமித் ஷா உத்தரவு

தேசிய தலைநகரில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி:

டெல்லி ஜஹாங்கீர்புரியில் நேற்று நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரு பிரிவினரிடையே மோதல் வெடித்தது. இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த மோதல் குறிதது டெல்லி காவல்துறை ஆணையர் உள்பட உயர் அதிகாரிகளுடன் மத்திய  உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.  தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டார்.  இந்த வன்முறை குறித்து விசாரிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய தலைநகரில் நடந்த வன்முறை மற்றும் கல்வீச்சு சம்பவங்கள் துரதிர்ஷ்டவசமானது என்றும், இந்த நடவடிக்கைகளின் பின்னணியில் உள்ளவர்கள் தப்பிக்க முடியாது என்றும் டெல்லி துணை நிலை ஆளுனர் அனில் பைஜால் தெரிவித்துள்ளார். மக்கள் அமைதி காக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.  

அமைதி இல்லாமல் நாடு முன்னேற முடியாது என தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தலைநகரில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஜஹாங்கீர்புரியில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும்  இருதரப்பு குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை நிலை நாட்ட முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும், டெல்லி சட்டம் ஒழுங்கு சிறப்பு காவல் ஆணையர்  டிபேந்திர பதக் தெரிவித்துள்ளார்.  

நிலைமையைக் கட்டுப்படுத்த போதுமான காவல் துறை படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »