Press "Enter" to skip to content

சென்னை அரசு மருத்துவமனையில் தீ விபத்து

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 3 பிளாக்குகளை கொண்ட பிரமாண்ட கட்டிடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கட்டிடங்களின் பின் பகுதியில் உள்ள பழைய கட்டிடத்தில் நரம்பியல் பிரிவு செயல்பட்டு வருகிறது.

அதன் அருகில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி.ஸ்கேன் மையங்களும் இயங்கி வருகின்றன. கட்டிடத்தில் உள்ள ஒரு அறையில் ஆபரே‌ஷனுக்கு தேவையான பொருட்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆகியவையும் வைக்கப்பட்டு இருந்தன.

இந்தநிலையில் இன்று காலை 11 மணி அளவில் நரம்பியல் பிரிவு கட்டிடத் தின் 2-வது மாடியில் திடீ ரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ மளமளவென பரவியதால் கட்டிடம் முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது. இதையடுத்து ஆஸ்பத்திரி ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். நரம்பியல் பிரிவில் நோயாளிகள், பணியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி தவித்தனர்.

அவர்களை ஆஸ்பத்திரி பணியாளர்கள் சிலரே அவசரம் அவசரமாக மீட்டு வெளியில் கொண்டு வந்த னர்.

இதுபோன்று மீட்கப்பட்ட நோயாளிகள் அங்குள்ள மரத்தடியில் தங்க வைக்கப் பட்டனர். இதற்கிடையே 3 தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதைத்தொடர்ந்து கூடுதலாக தண்ணீர் வண்டிகள் வரவழைக்கப் பட்டு தொடர்ந்து தீயை அணைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. இந்த பரபரப்புக்கு இடையே கட்டிடத்தில் சிக்கி கொண்ட நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் சிலர் ஜன்னல் வழியே வெளியேறி மொட்டை மாடியில் சென்று தஞ்சம் அடைந்து கூச்சல் போட்டனர்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் பெரிய ஏணியை கொண்டு வந்து மாடியில் தவித்தவர்களை மீட்டனர்.

இப்படி தீயணைப்பு வீரர்கள் மீட்பு மற்றும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த நேரத்தில் 2 ஆக்சிஜன் சிலிண்டர்கள் திடீரென வெடித்து சிதறியது. இதனால் தீ மேலும் அதிகரித்தது. இதையடுத்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்து விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டது. இந்த பீதிக்கு நடுவிலேயே தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியை மேற்கொண்டனர்.

தீ விபத்து பற்றி கேள்விப் பட்டதும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

பின்னர் பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறும்போது, “தீ விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து 3 நோயாளிகள் உள்பட 32 பேர் பத்திரமாக மீட்கப்பட் டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

தீ விபத்து நடைபெற்ற கட்டிடத்தில் நோயாளிகள், மருத்துவ பணியாளர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருந்தனர். நரம்பியல் பிரிவு பகுதியில் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவும் செயல்பட்டு வந்தது. இங்கும் கை, கால்கள் முறிந்த நிலையில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.

அவர்களால் உடனடியாக வெளியேற முடியாத நிலையில் பீதியில் தவித்தனர். அவர்களையும் தீயணைப்பு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் பத்திரமாக மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். மாடியில் சிக்கிக் கொண்டவர்களை ராட்சத ‘ஸ்கை-லிப்ட்’ மூலம் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

தீயை அணைக்கும் பணி சவாலாக இருந்ததால் கூடுதலாக தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப் பட்டன. 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்திருந்த தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்பு மற்றும் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்து காரணமாக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »