Press "Enter" to skip to content

விமான எரிபொருள் மீதான வரியை குறைக்க வேண்டும்- எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

சாமானிய மக்கள் விமான பயணம் செய்வதை பிரதமர் மோடி உறுதிபடுத்தும் நிலையில், எதிர்க்கட்சிகள் அதற்கு தடைகளை உருவாக்குவதாக மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி:

கொரோனா தொற்று பரவல் குறித்து மாநில முதலமைச்சர்கள் உடனான கலந்துரையாடலின் போது பேசிய பிரதமர் மோடி, எரிபொருள் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இதற்கு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், தெலுங்கானா மாநிலங்களின் முதலமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை மந்திரி  ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்  தெரிவித்துள்ளதாவது:

விமான செயல்பாட்டின் செலவில் 40 சதவிகிதம் விமான எரிபொருளுக்கு செல்கிறது. எதிர்க்கட்சிகள் பெட்ரோலிய பொருள் விலையேற்றத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்திக் கொண்டு வரிகளை குறைக்காமல் மாநில மக்களை கொள்ளையடிக்கின்றன.

விமான அனுமதிச்சீட்டு விலை ஏன் குறையவில்லை என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மற்றும் டெல்லி மாநில அரசுகள் விமான எரிபொருள் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கின்றன. ஆனால் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு சதவீதம் மட்டுமே விமான எரிபொருள் மீது வரி வசூலிக்கப்படுகிறது.

பிரதமர் மோடி தனது தொலைநோக்குப் பார்வையின் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கு மலிவு விலையில் விமானப் பயணம் செய்வதை உறுதி செய்கிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் தடைகளை உருவாக்குகின்றன. இதன் மூலம் வேறுபாடு தெளிவாக உள்ளது. 

எதிர்க்கட்சிகளின் நோக்கம் எதிர்ப்பு மற்றும் விமர்சனம் செய்வது மட்டுமே தவிர, மக்களுக்கு அவர்கள் நிவாரணம் வழங்கவில்லை. 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »