Press "Enter" to skip to content

இலங்கை மக்களுக்கு ரூ.123 கோடி மதிப்பிலான அரிசி, மருந்து வகைகள் வழங்க அரசு முடிவு- மு.க.ஸ்டாலின் பேச்சு

ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்காக நாம் உதவிகள் செய்தாக வேண்டும். அந்த வகையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை:

இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில், அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கடல் சூழ்ந்த இலங்கை நாடு, இன்று கண்ணீரால் சூழப்பட்டுள்ளது. ஈழத்தமிழ் மக்களுக்காக தி.மு.க. அரசு ஆளுங்கட்சியாக இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருந்த போதும் ஆற்றிய பணிகளை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.

‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்’ என்பதைப் போல, நம்முடைய ரத்தத்தில், உணர்வில், வாழ்வில் கலந்த ஒரு பிரச்சினையாக இலங்கைப் பிரச்சினை இருந்து வருகிறது.

இலங்கையில் வாழக்கூடிய ஈழத்தமிழர் நலன் கருதி அரசியல் ரீதியாகப் பல்வேறு முழக்கங்களை வெவ்வேறு காலக்கட்டங்களில் நாம் முன்வைத்திருக்கிறோம்.

காலச்சக்கரம் இலங்கை மக்களை அலைக்கழித்து எங்கோ கொண்டு போய் நிறுத்திவிட்டது. இருப்பினும், இன்றைய நாள் மனிதாபிமான அடிப்படையில் நாம் கைகொடுக்க வேண்டும் என்பதே இந்த அரசினுடைய நிலைப்பாடு ஆகும்.
 
தற்போது இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கான காரண, காரியத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. அதேநேரத்தில், அங்குள்ள மக்கள் படக்கூடிய துன்பங்கள், துயரங்கள் நம் அனைவருடைய மனதிலும் சோகத்தை உருவாக்கியிருக்கிறது.

இலங்கை முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு மிகக் கடுமையாக இருக்கிறது. கல்லெண்ணெய், டீசலுக்காக வாகனங்கள் பல மணி நேரம் வரிசையிலே காத்திருக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. மண்ணெண்ணெய் வாங்க பொதுமக்கள் 6 மணி நேரம் காத்திருக்க வேண்டிய ஒரு அவல நிலையும் ஏற்பட்டிருக்கிறது. எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பதில் கடுமையான தட்டுப்பாடும் இருக்கிறது. இதனால் சமையல் செய்வதே சிக்கலுக்குரியதாக மாறியிருக்கிறது என்று செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன. நாடு முழுவதும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவுகிறது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் செயல்பட முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றன.

பல அத்தியாவசியப் பொருட்களுடைய விலை பன்மடங்கு உயர்ந்து கொண்டே போகிறது. பேருந்துகள், தொடர் வண்டிகள் ஆகிய போக்குவரத்துச் சேவைகள் குறைக்கப்பட்டிருக்கின்றன; பல இடங்களில் அவை நிறுத்தப்பட்டிருக்கின்றன.

ரசாயன உரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதால், மலையகப் பகுதிகளில் தேயிலை விளைச்சல் பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலும் நமக்கு வருகிறது. இதனால், தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியக்கூடிய மலையகத் தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கை நாடு முழுவதும் உயிர்காக்கும் பல மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் ரசாயன உரம் கிடைக்காதது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. சாதாரணமாக 1200 ரூபாய்க்குக் கிடைத்த உர மூட்டை தற்போது 32,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பால் விலை, பால் பொடி விலை, உணவுப் பொருள்கள் விலை என அனைத்தும் பல நூறு மடங்கு உயர்ந்துவிட்ட காரணத்தால் பச்சிளம் குழந்தைகளும் கூட துன்பத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்ற செய்தி கேட்டு நம் நெஞ்சம் பதைபதைக்கிறது. மொத்தத்தில் இலங்கை மக்களின் வாழ்க்கை என்பது மிகமிக மோசமான நிலையை அடைந்துள்ளது.

அண்டை நாட்டுப் பிரச்சினையாக இதை நாம் பார்க்க முடியாது. அங்கு யார் ஆட்சியில் இருக்கிறார்கள். அவர்கள் எத்தகையவர்கள் எனப் பார்க்க இயலாது. அந்த நாட்டு மக்களுக்கு நம்மால் ஆன உதவியை நாம் செய்தாக வேண்டும் என்பதைத் தெரிவிக்க நான் விரும்புகிறேன்.

இலங்கையில் இருந்து இத்தகைய செய்திகள் வந்ததுமே, ஈழத்தமிழ் மக்களுக்கு நம்மால் ஆன அனைத்தையும் வழங்குவோம் என்று நான் அறிவித்தேன். பிரதமரை 31-3-2022 அன்று நான் நேரிலே சந்தித்து வலியுறுத்தினேன்.

அப்போது அதனை அறிந்து இலங்கைத் தமிழர் தலைவர்களும், சில தமிழ் அமைப்புகளும் எனக்கு வைத்த கோரிக்கை, ‘தனியாகத் தமிழர்களுக்கு மட்டும் உதவி என்று அனுப்ப வேண்டாம்; இலங்கை மக்களுக்கு என்று பொதுவாக அனுப்புங்கள். மக்களைப் பிரித்துப் பார்க்க வேண்டாம். அனைத்து இன மக்களும் சேர்ந்துதான் இந்த நெருக்கடியை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்’ என்று சொன்னார்.

அதைக் கேட்டபோது நான் நெகிழ்ந்து போனேன். என்னால் உணர்ச்சிப் பெருக்கைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதுதான் தமிழர் பண்பாடு. “பகைவர்க்கும் அருள்வாய் நன்நெஞ்சே” என்பதைப் போல, இலங்கைத் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.

இந்த நிலையில், ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்காக நாம் உதவிகள் செய்தாக வேண்டும். அந்த வகையில் பின்வரும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கலாம் எனத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.

40 ஆயிரம் டன் அரிசி; இதனுடைய ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய். அதேபோல், உயிர் காக்கக்கூடிய 137 மருந்துப் பொருட்கள்; இதன் மதிப்பு 28 கோடி ரூபாய். குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால்பொடி. இதன் மதிப்பு 15 கோடி ரூபாய். இவற்றையெல்லாம் இலங்கையில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் நாம் வழங்க நினைக்கிறோம். இவற்றை மாநில அரசு நேரடியாக வழங்க முடியாது. ஒன்றிய அரசின் அனுமதி யோடு இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் வழியாகத்தான் வழங்க வேண்டும். இலங்கையில் இத்தகைய நெருக்கடி ஏற்பட்டதுமே, இந்திய அரசிடம் இதுகுறித்த கோரிக்கையை நான் முன்வைத்தேன்.
31-3-2022 அன்று டெல்லி சென்று பிரதமரை சந்தித்தபோதும் இதனை நான் வலியுறுத்தியிருக்கிறேன். அதனைத் தொடர்ந்து ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் நான் கோரிக்கை வைத்திருக்கிறேன். அவருக்கும் 15-4-2022 அன்று கடிதம் எழுதி நினைவூட்டியிருக்கிறேன். இன்றுவரை எந்தத் தகவலும் இல்லை. ஆனால் அங்கு நிலைமை தற்போது மிகவும் மோசமடைந்துள்ளது.

‘உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’ என்கிறார் வள்ளுவர். உதவி என்பதும் மனிதாபிமான அடிப்படையில் உடனடி உதவியாக இருக்க வேண்டும். காலத்தே செய்தால்தான் அது உதவி. இதனைத்தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த எண்ணத்தை ஒன்றிய அரசுக்குச் சொல்லக்கூடிய வகையில் ஒரு தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் நிறைவேற்றி அனுப்புவது காலத்தினுடைய கட்டளை என்று அரசு கருதுகிறது. அதன் அடிப்படையில், கீழ்க்காணும் தீர்மானத்தை நான் இங்கே முன்மொழியக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »