Press "Enter" to skip to content

பொங்கல் விழாவில் ‘விளையாட்டாக’ எய்ம்ஸ் கட்டும் போட்டி: வெற்றி பெற்ற சிறுவனுக்கு பரிசளித்த சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை: பொங்கல் விளையாட்டு விழாவில் ‘விளையாட்டாக’ எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் போட்டியில் வெற்றி பெற்ற சிறுவனுக்கு பரிசளித்து பாராட்டி உள்ளார் எம்.பி சு.வெங்கடேசன். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழகத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு பிப். 28-ம் தேதி அறிவித்தது. இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு மதுரைக்கு அருகே உள்ள தோப்பூரில் இந்த மருத்துவமனையை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ம் தேதி பிரதமர் மோடி மதுரைக்கே வந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். எனினும், தற்போது வரை மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான கட்டுமானப்பணி தொடங்கப்படவில்லை.

அதேநேரத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துமவனைக்கான மாணவர் சேர்க்கை மட்டும் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் நடப்பாண்டு நடத்தப்பட்டு வகுப்புகள் தொடங்கியிருக்கின்றன. மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணி குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த சூழலில் பைகரா பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளையினர் நடத்திய பொங்கல் விழாவில் சு.வெங்கடேசன், எம்.பி பங்கேற்றார். “இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரின் தமிழர் திருநாள் விளையாட்டு விழாவில் மிகவும் வித்தியாசமான போட்டி நடத்தப்பட்டுள்ளது. எய்ம்ஸ் கட்டும் போட்டியை நடத்தி உள்ளனர். ஒரு பெரிய வட்டத்திற்குள் வைக்கப்பட்டுள்ள செங்கல்லை கண்களை கட்டிய நிலையில் போட்டியாளர் எடுத்து, அதை வட்டத்திற்கு வெளியில் ‘தமிழ்நாடு’ என எழுதப்பட்டுள்ள இடத்தில் வைத்தால் வெற்றி பெற்றதாக அறிவிக்கிறார்கள். இன்று தமிழ்நாடு எதிர்கொண்டு வரும் புறக்கணிப்பை விளையாட்டு வடிவில் எடுத்து சொல்லி உள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு எனது பாராட்டுகள்” என தெரிவித்துள்ளார்.

இதில் எட்டே நிமிடத்தில் எய்ம்ஸ் கட்டி முடித்த சிறுவனை பாராட்டி பரிசும் வழங்கி உள்ளார் அவர்.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »