Press "Enter" to skip to content

அகிலன்: திரை விமர்சனம்

சென்னை துறைமுகத்தில் கிரேன் ஆபரேட்டராக பணியாற்றும் அகிலன் (ஜெயம் ரவி), தடைசெய்யப்பட்ட பொருள்களைக் கப்பல் மூலம் கடத்தும் பரந்தாமனுக்கு (ஹரீஷ் பெரடி) அடியாளாகவும் இருக்கிறார். கடத்தல் கும்பலின் சர்வதேச தாதா கபூரை (தருண் அரோரா)எப்படியாவது சந்திக்க வேண்டும் என்பது அகிலனின் ஆசை. இந்தியப் பெருங்கடலின் தனி ராஜாவாகும் கனவில் இருக்கும் அகிலனின் ஆசை நிறைவேறியதா? அந்த ஆசைக்குப் பின்னிருக்கும் லட்சியம் என்ன? என்பதை, அதிகம் அறிந்திராத துறைமுகப் பின்னணியில் சொல்கிறது ‘அகிலன்’.

மூன்று பக்கமும் நீரால் சூழப்பட்ட நிலத்தில், கடல் வழி போக்குவரத்தின் சட்டவிரோத வணிகம், அதன் கரடு முரடான துரோகச் செயல்பாடுகள், அதன் பின் இருக்கும் ‘இந்திய பெருங்கடலின் ராஜா’என்கிற அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கும் இரக்கமற்ற இளைஞன், அவனுக்குள் இருக்கும் உலகப் பசி போக்கும் அசத்தலான ‘தமிழன்னை’ கனவு என தீவிரமானக் கதையை, இதுவரைச் சொல்லப்படாதப் பின்னணியில் கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் என்.கல்யாண் கிருஷ்ணன். ஆனால், இவை அனைத்தையும் கோர்த்த விஷயத்தில்தான் தடுமாறி இருக்கிறார்.

உலகின் பசி தீர்க்கும் லட்சியத்தை கடத்தல் மாஃபியா பின்னணியில் சொல்ல வந்த கதை, அதை அழுத்தமாகச் சொல்லாமல் மற்ற ‘டீட்டெய்லிங்’கில் கவனம் செலுத்தி இருப்பதால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் சாதாரணமாகக் கடக்கிறது. ஆனால், அந்தக் குறையை, சர்வதேச இணையக் குற்றவாளியை கன்டெயினரில் மறைத்துக் கடத்துவது போன்ற சில சில்லிட வைக்கும் காட்சிகள் போக்குகின்றன.

இரண்டாம் பாதி திரைக்கதை எதையும் முழுதாகச் சொல்லாமல் மொத்தமாகக் குழப்பி விடுகிறது. அகிலனின் முந்நிகழ்வு நினைவுகூறல்கில் இருந்து கதை நகரத் தொடங்குவதும் அதற்கடுத்து என்ன நடக்கும் என்பதை யூகித்துவிடக் கூடிய காட்சிகளும் கதையோடு ஒன்றவிடாமல் தடுக்கின்றன.

தனது கேரக்டருக்கான தோற்றத்தையும் உடல் மொழியையும் சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார் ஜெயம் ரவி.அதற்கான மெனக்கெடலும் உழைப்பும்தெரிகிறது. அவர் காதலியாக வரும் பிரியா பவானி சங்கரின் ‘கதாநாயகி’ பாவனை, உதவி ஆய்வாளர் கேரக்டருக்குப் பொருந்தவில்லை.

அகிலனை கைது செய்யத் துடிக்கும் நேர்மையான காவல் அதிகாரிசிராக் ஜானி, சில காட்சிகள் மட்டுமேவந்துபோகும் பகைவன் தருண் அரோரா,துறைமுகக் கடத்தல் தலைவன் ஹரீஷ் பெரடி, தொழிற்சங்கத் தலைவர் ஜனநாதனாக மதுசூதன் ராவ், ஹரீஷ் உத்தமன், சில காட்சிகள் மட்டுமே தலைக்காட்டிப் போகும் தான்யாராஜேந்திரன் ஆகியோர் தங்கள்பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

விவேக் ஆனந்த்தின் ஒளிப்பதிவில், துறைமுக நடைமுறைகளும் நீலக்கடலின் நீள அகலமும் வியக்க வைக்கின்றன. பின்னணி இசையில் சாம் சி.எஸ் தனித்துத் தெரிகிறார்.

படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள். அதைச் சரி செய்து, பசி போக்கும் ‘சாரிட்டி ஷிப்’ விஷயத்தை அழுத்தமாகச் சொல்லியிருந்தால் படம் இன்னும் ஈர்த்திருக்கும். இருந்தாலும் பிரம்மாண்ட காட்சி அனுபவத்துக்காக அகிலனை ரசிக்கலாம்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »