Press "Enter" to skip to content

ஆஸ்கர் விருது வென்றது ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல்

அகாடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றுவருகிறது. இதில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘‘நாட்டு நாட்டு’’ பாடலுக்கு விருது கிடைத்துள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன் உட்பட பலர் நடித்த திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’. சுதந்திரப் போராட்ட வீரர்களான சீதாராம ராஜு, கொமரம் பீம் ஆகியோரின் நட்பை மையமாகக் கொண்டு உருவான இந்தப் பீரியட் படத்துக்கு கீரவாணி இசை அமைத்திருந்தார். வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த பாடலுக்கான விருதை சமீபத்தில் வென்றது.

பல்வேறு விருதுகளைப் பெற்று வரும் இப்படம் ஆஸ்கர் விருதுக்கும் அனுப்பப்பட்டது. அதன்படி, ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘‘நாட்டு நாட்டு’’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. சிறந்த ஒரிஜனல் பாடல் பிரிவில் இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கர் விருதை வென்றார். அப்போது ராஜமவுலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

இசையமைப்பாளர் கீரவாணியுடன், பாடலை எழுதிய சந்திரபோஸும் ஆஸ்கர் விருது வென்றார். விருதுவென்ற இசையமைப்பாளர் கீரவாணி பேசும்போது, ராஜமவுலிக்கு பாட்டு பாடியபடியே நன்றி தெரிவித்தார். மேலும் ஆர்ஆர்ஆர் இந்தியாவின் பெருமை என்றும் குறிப்பிட்டார்.

முன்னதாக, ஆஸ்கர் விருது விழாவில் ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறப்பு பாடலாக இடம்பெற்றது. ஆஸ்கர் விருது மேடையில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு அமெரிக்க நடனக் கலைஞரான நடிகை லாரன் காட்லீப் (Lauren Gottlie) உற்சாகமாக நடனமாடினார். நடனத்தின்போது அரங்கமும் உற்சாகமடைந்தது. அரங்கத்தில் இருந்தவர்கள் கூச்சலிட்டபடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஆஸ்கர் விருது விழாவில், ‘நாட்டு நாட்டு’ பாடல் நேரடியாகப் பாடப்பட்டது. இந்தப் பாடலை பாடிய ராகுல் சிப்லிகுஞ்-சும் காலபைரவாவும் ஆஸ்கர் மேடையில் பாடினர். முன்னதாக, நடிகை தீபிகா படுகோன் ‘நாட்டு நாட்டு’ பாடல் குறித்த அறிமுகத்தை ஆஸ்கர் மேடையில் எடுத்துரைத்தார்.

பாடல் முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »