Press "Enter" to skip to content

ஐபிஎல் இல்லை என்றால் எம்எஸ் டோனி இந்திய அணிக்கு திரும்புவது கடினம்: கவுதம் கம்பிர்

இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருக்கும் எம்எஸ் டோனி இந்திய அணிக்கு திரும்புவது கடினம் எனக் கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. இவர் தற்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டிக்குப் பிறகு சர்வதேச போட்டியில் விளையாடாமல் உள்ளார்.

ஏறக்குறைய அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது என்று கூறினாலும், எம்எஸ் டோனி தனது ஓய்வு குறித்து வாய்திறக்கவில்லை.

அவர் டி20 உலக கோப்பையில் விளையாட விரும்புவதாக தெரிகிறது. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடினால் இந்திய அணியில் அவருக்கு இடமுண்டு என்று எனச் சொல்லப்படுகிறது.

இதனால் ஐபிஎல் போட்டிக்கு விளையாடும் வகையில் சென்னையில் பயிற்சி மேற்கொண்டார். கொரோனா வைரஸ் தொற்றால் ஏப்ரல் 15-ந்தேதி வரை ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டன. தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரவில்லை. இதனால் காலவரையின்றி ஐபிஎல் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை என்றால் எம்எஸ் டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கடினம் என முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘இந்த வருடம் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறாவிட்டால், எம்எஸ் டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதும் மிகவும் கடினமானதாகிவிடும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விளையாடாமல் இருக்கும் எம்எஸ் டோனியை எதன் அடிப்படையில் தேர்வு செய்வார்கள்.

உண்மையிலேயே கேஎல் ராகுலின் விக்கெட் கீப்பர் திறமை டோனிக்கு இணையாக இல்லைதான். ஆனால், டி20 கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரைக்கும் கேஎல் ராகுலை விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஐபிஎல் நடைபெறாவிட்டால் டோனிக்கான வாய்ப்பு குறைவுதான்.

இறுதியாக இந்திய அணிக்காக தேர்வு செய்யும்போது யாராக இருந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க முடியும் என்றால் மட்டுமே இந்திய அணிக்காக விளையாட வேண்டும். அவரது ஓய்வு என்பது அவரின் தனிப்பட்ட முடிவு’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »