Press "Enter" to skip to content

அணிக்கு தேர்வு செய்யாதபோது இரவு முழுவதும் கதறி அழுதேன்: விராட் கோலி

மாநில அணிக்கு என்னை தேர்வு செய்யாமல் முதல் முறையாக நிராகரித்தபோது வேதனை தாங்க முடியாமல் இரவு முழுவதும் கதறி அழுததாக விராட் கோலி கூறியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே அடைப்பட்டு கிடக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சமூக வலைத்தளம் மூலம் முன்னாள் வீரர்கள், ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடுகிறார்.

அந்த வகையில் மாணவர்களுடன் கலந்துரையாடியபோது அவர் கூறியதாவது:-

முதல் முறையாக மாநில அணிக்காக (டெல்லி அணி) என்னை தேர்வு செய்யாதபோது, அது இரவு நேரம் என்று நினைக்கிறேன். மனம் உடைந்து கண்ணீர் விட்டேன். அதிகாலை 3 மணி வரை சத்தம் போட்டு அழுதேன், கதறினேன். 

நிச்சயம் தேர்வு செய்யப்படுவேன் என்று ஆவலுடன் காத்திருந்தேன். நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை. அந்த சமயத்தில் நான் உள்ளூர் ஆட்டங்களில் நன்றாக ரன் குவித்தேன். எல்லாமே எனக்கு சரியாக அமைந்திருந்தது. சிறப்பாக விளையாடி நல்ல நிலையை எட்டியும் நிராகரித்து விட்டனர்.

என்ன காரணத்துக்காக என்னை சேர்க்கவில்லை என்று பயிற்சியாளரிடம் தொடர்ந்து 2 மணிநேரம் பேசினேன். எதுவும் தெரியாமல் புலம்பினேன். ஆனால் மீண்டும் விடா முயற்சியும், ஆர்வமும், அர்ப்பணிப்பு உணர்வும் இருக்கும்போது அது உங்களுக்குரியதை பெற்றுத்தரும். இதைத்தான் நீங்கள் (மாணவர்கள்) செய்ய வேண்டும்.

எனது மனைவி அனுஷ்கா சர்மாவிடம் இருந்து நிறைய நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டு இருக்கிறேன். நானும், அவரும் சந்தித்து பழகியதில் இருந்து பொறுமையை கடைபிடிப்பதை கற்றுக் கொண்டேன். முன்பு நான் அந்த அளவுக்கு பொறுமைசாலி கிடையாது.

அவரது தனித்துவமும், இக்கட்டான சூழலில் அவரது அமைதியையும் பார்க்கும்போது அந்த தருணத்தில் எப்படி எதிர்த்து போராட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன். கடினமான நேரங்களில் உங்களது பிடிவாத குணங்களை உதறிவிட்டு, தொடர்ந்து நம்பிக்கையுடன் போராடினால், இறுதியில் அதற்குரிய நல்ல வழிமுறையை கண்டறிவீர்கள்.

இவ்வாறு கோலி கூறினார்.

31 வயதான விராட் கோலி 2006-ம் ஆண்டு டெல்லி அணிக்காக முதல் முறையாக விளையாடினார். 2008-ம் ஆண்டு இந்திய அணிக்குள் அடியெடுத்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »