Press "Enter" to skip to content

இந்திய அணியின் மட்டையிலக்கு கீப்பர் சகா வீட்டில் கொள்ளை முயற்சி

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் விரித்திமான் சகாவின் பரம்பரை வீட்டில் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்துள்ளது.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்படுபவர் விரித்திமான் சகா. இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் போன்றார் இருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட் என்று வந்தால் அது சகா மட்டுமே முதல் சாய்ஸ்.

தோனி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுப்பெற்ற பின்பு சகாவே டெஸ்ட் அணிக்கு கீப்பராக செயல்பட்டு வருகிறார். இவர் காயமடைந்தால் மட்டுமே டெஸ்ட் அணியில் மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்திய அணியின் கேப்டன் கோலி கூட, உலகளவில் இப்போதைக்கு சகாதான் சிறந்த விக்கெட் கீப்பர் என்று புகழ்ந்துள்ளார்.

இத்தனை புகழ்கள் கொண்ட சகாவுக்கு திருட்டுச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரியில் சகாவின் குடும்பத்துக்கு சொந்தமான பரம்பரை வீடு இருக்கிறது. அந்த வீட்டில் நேற்று இரவு திருட்டு கும்பலொன்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து சகாவின் மாமா கூறும்போது ‘‘6 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடிக்க வீட்டுக்குள் புகுந்தது. உடனடியாக சுதாரித்த நான் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தேன், இதனையறிந்த கொள்ளையர்கள் தப்பியோடிவிட்டனர்’’ எனத் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து அறிந்த சாஹா கூறுகையில் ‘‘இந்த கொள்ளைச் சம்பவம் என்னை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது, துரதிருஷ்டவசமானது. சிறுவயதில்தான் இதுபோன்ற கொள்ளைச் சம்பவம் குறித்து கேள்விப்பட்டுள்ளேன். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கிறேன்’’ என தெரிவித்துள்ளார். சகா இப்போது குடும்பத்துடன் கொல்கத்தா நகரின் தென் பகுதியில் வசித்து வருகிறார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »