Press "Enter" to skip to content

இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனி கோஸ்வாமி மரணம்

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானாகவும் திகழ்ந்த சுனி கோஸ்வாமி மாரடைப்பால் காலமானார்.

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான சுனி கோஸ்வாமி கடந்த சில மாதங்களாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கொல்கத்தாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.

இந்திய கால்பந்து உலகில் பிரபலமான வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர், சுனி கோஸ்வாமி. ஒருங்கிணைந்த பெங்காலில் உள்ள கிஷோர்கஞ்ச் மாவட்டத்தில் (தற்போது வங்காளதேசத்தில் உள்ளது) 1938-ம் ஆண்டு பிறந்த கோஸ்வாமி இளம் வயதிலேயே கால்பந்து விளையாட்டு மீது ஆர்வம் கொண்டார். மோகன் பகான் கிளப்பில் இணைந்த அவர் அதில் சிறப்பாக விளையாடி அதன் மூலம் இந்திய அணிக்குள் நுழைந்தார்.

1962-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டில் சுனி கோஸ்வாமி தலைமையிலான இந்திய கால்பந்து அணி தங்கப்பதக்கத்தை வென்றது, அவரது கால்பந்து வாழ்க்கையில் முத்தாய்ப்பாக அமைந்தது. அதில் தெற்கு வியட்நாம் அணிக்கு எதிரான அரைஇறுதியில் 2 கோல் அடித்த கோஸ்வாமி, தென்கொரியாவுக்கு எதிரான இறுதிஆட்டத்தில் ஒரு கோல் அடிக்க உதவிகரமாக இருந்தார்.

மோகன் பகான் அணிக்கும் 5 ஆண்டுகள் கேப்டனாக செயல்பட்டு இருப்பதுடன் அந்த கிளப்புக்காக அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் சுனி கோஸ்வாமி (145 கோல்கள்) தற்போதுவரை முதலிடத்தில் நீடிக்கிறார். அவரது அருமையான கால்பந்து ஆட்டத்தை பார்த்து இங்கிலாந்தை சேர்ந்த டோட்டன்ஹாம் ஹாட்ஸ்புர் கிளப் அந்த சமயத்தில் அவருக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டார்.

கடைசி வரை மோகன் பகான் கிளப்புக்காக மட்டுமே ஆடினார். இந்திய கால்பந்து அணிக்காக 50 ஆட்டங்களில் களம் இறங்கி இருக்கிறார். இதில் 1960-ம் ஆண்டு ரோம் ஒலிம்பிக்கில் பங்கேற்றதும் அடங்கும்.

சுனி கோஸ்வாமி பற்றி இன்னொரு ஆச்சரியமும் உண்டு. கால்பந்து தவிர, கிரிக்கெட்டிலும் திறமைசாலியாக காணப்பட்டார். கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட்டில் முழுமையாக கவனம் செலுத்தினார். முதல்தர கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்காக 1962-63-ம் ஆண்டு முதல் 1972-ம் ஆண்டு வரை ஆடினார். 46 முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடி ஒரு சதம், 7 அரைசதம் உள்பட 1,592 ரன்கள் எடுத்திருப்பதுடன், 47 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். 1972-ம் ஆண்டு அவரது தலைமையிலான பெங்கால் அணி ரஞ்சி கிரிக்கெட்டில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது.

1962-ம் ஆண்டு ஆசியாவின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பெற்றார். விளையாட்டில் அவர் அளித்த சேவையை பாராட்டி மத்திய அரசு 1963-ம் ஆண்டு அர்ஜூனா விருதும், 1983-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கியது. கடந்த ஜனவரி மாதம் அவரது 82-வது பிறந்த நாளையொட்டி தபால்துறை அவரது நினைவு தபால் தலையை வெளியிட்டு கவுரவித்தது. சுனி கோஸ்வாமியின் மறைவுக்கு கால்பந்து வீரர்களும், கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »