Press "Enter" to skip to content

திமுக- காங்கிரஸ் கட்சிகள், பெண்களுக்கு எதிரானவை என்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள்: மோடிக்கு கேஎஸ்அழகிரி கண்டனம்

தமிழக வாக்காளர்கள் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியை தோற்கடித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு அமோக வெற்றி வழங்குவது உறுதியாகி விட்டது என்று கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தமிழக வளர்ச்சிக்கான பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விரிவாக பேசுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமர் தமது தகுதிக்கு குறைவாக பல்வேறு கருத்துக்களை கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

குறிப்பாக, மக்களவை தி.மு.க. உறுப்பினர் ஆ. ராசா கூறிய கருத்துக்கு கண்டனத்தை தெரிவிக்கிற வகையில் சில கருத்துக்களை கூறியது அவரது பதவிக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. ஏற்கனவே, ஆ. ராசா தான் கூறிய கருத்துக்கு மனப்பூர்வமான மன்னிப்பை வெளிப்படுத்திருக்கிறார். அதேபோல, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் அந்த கருத்துக்கு கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடி ஆ. ராசா பற்றி குறிப்பிட்டு பேசியதோடு நில்லாமல், தி.மு.க. பேச்சாளர் திண்டுக்கல் லியோனி குறித்தும் பேசியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தியாவின் பிரதமராக இருப்பவருக்கு சில சம்பிரதாய மரபுகள் உள்ளன.

அதனை முற்றிலும் புறக்கணிக்கிற வகையில் அவரது தமிழக சுற்றுப்பயண பேச்சு அமைந்தது. பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு தேர்தலில் தோல்வி பயம் ஏற்பட்டதையே உறுதி செய்கிறது.

தி.மு.க., காங்கிரஸ் பெண்களுக்கு எதிரான இயக்கம் என்று பிரதமர் மோடியும், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட் போன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் நீண்டகாலமாக பெண்களின் மேம்பாட்டிற்காக, உரிமைகளுக்காக கடுமையாக போராடியிருக்கிறது.

இந்தியாவின் பிரதமராக உலகம் போற்றும் வகையில் 15 ஆண்டுகாலம் பதவி வகித்து பெருமை சேர்த்தவர் அன்னை இந்திரா காந்தி. அதேபோல, 20 ஆண்டுகாலம் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று 2004 மக்களவை தேர்தலில் வகுப்புவாத பா.ஜ.க.வை தோற்கடித்து மதச்சார்பற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை 10 ஆண்டுகாலம் பாதுகாத்தவர் சோனியா காந்தி.

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி சார்பில் 2007-ல் பிரதீபா பாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டதை நினைவுகூற விரும்புகிறேன்.

மக்கள் பங்கேற்கிற ஜனநாயகத்தை உருவாக்குகிற வகையில் பஞ்சாயத்துராஜ், நகர்பாலிகா சட்டத்தை நிறைவேற்றுவதற்கு காரணமாக இருந்தவர் ராஜீவ்காந்தி.

1993-ல் நகர்பாலிகா, பஞ்சாயத்துராஜ் சட்டம் கொண்டு வந்து அனைத்து பொறுப்புகளிலும் பெண்களுக்கு 33 சதவிகிதம் கொண்டு வரப்பட்டது.

அதன் காரணமாக இன்றைக்கு பஞ்சாயத்துராஜ் அமைப்புகளில் 13 லட்சத்து 45 ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் பொறுப்பேற்று மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பெண்கள் பங்கேற்கிற ஜனநாயகம் உள்ளாட்சி அமைப்புகளில் செழிதோங்கி, சிறப்பாக நடைமுறையில் இருந்து வருவதற்கு காரணம் காங்கிரஸ் கட்சி தான்.

2014 மக்களவை தேர்தலில் 62 பெண்களும், 2019 மக்களவை தேர்தலில் 78 பெண்கள், அதாவது 14.31 சதவிகிதம் தான் தேர்ந்தெடுக்கப்பட்டி ருக்கிறார்கள். இத்தகைய குறைவான பிரதிநிதித்துவம் மேலும் உயர்ந்து 33 சதவிகிதமாக சோனியா காந்தியின் முயற்சி வெற்றி பெற்றிருந்தால் பெண்களுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைத்திருக்கும். அந்த வாய்ப்பை பா.ஜ.க. முடக்கியது என்பதை குற்றச்சாட்டாக கூற விரும்புகிறேன்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எப்பொழுதுமே பெண்கள் உரிமையை ஏற்றுக் கொண்டதில்லை. ஆனால், காங்கிரஸ் இயக்கத்தில் இன்றைக்கும் பல பெண்கள் தலைமைப் பொறுப்புகளில் வருவதை பார்க்க முடிகிறது.

எனவே, ஆதாரமற்ற அவதூறு கருத்துக்களை கூறி தி.மு.க., காங்கிரஸ் பெண்களுக்கு எதிரான இயக்கம் என்று தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மண்ணில் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பிரதமர் மோடி உள்ளிட்ட எவர் கூறினாலும், அதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க தயாராக இல்லாத நிலையில் தேர்தல் பிரசாரத்தை திசைத் திருப்பி அரசியல் ஆதாயம் தேடலாம் என்ற கனவு நிச்சயம் நிறைவேறாது. தமிழக வாக்காளர்கள் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியை தோற்கடித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு அமோக வெற்றி வழங்குவது உறுதியாகி விட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »