Press "Enter" to skip to content

புதிய நுணுக்கங்களை கற்று வருகிறேன் – பி.வி.சிந்து பேட்டி

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்க ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து தகுதி பெற்று இருக்கிறார்.

புதுடெல்லி:

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்க ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், உலக சாம்பியனுமான பி.வி.சிந்து தகுதி பெற்று இருக்கிறார். ஒலிம்பிக் போட்டிக்காக தீவிரமாக தயாராகி வரும் 25 வயதான பி.வி.சிந்து அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

பேட்மிண்டனில் பெண்கள் பிரிவை பொறுத்தமட்டில் ‘டாப்-10’ வீராங்கனைகள் அனைவரும் ஒரே மாதிரியான தரத்தை உடையவர்கள். ஒரு வீராங்கனை (நடப்பு சாம்பியன் கரோலினா மரின் காயத்தால் விலகல்) விளையாடவில்லை என்பதற்காக அதனை எளிதாக எடுத்து கொள்ள முடியாது. மற்ற சிறந்த வீராங்கனைகளான தாய் ஜூ யிங், ராட்சனோக், நஜோமி ஒகுஹரா, அகானே யமாகுச்சி ஆகியோர் ஒலிம்பிக் களத்தில் உள்ளனர். எனவே நான் எந்த வகையிலும் மெத்தனமாக இருக்க முடியாது. அதுவும் ராட்சனோக் போன்று மிகவும் திறமையான, தந்திரமான ஒன்றிரண்டு வீராங்கனைகள் உள்ளனர். அவர்களை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

கொரோனா பாதிப்பால் கிடைத்த இடைவெளி என்னை பொறுத்தமட்டில் திறமையையும், ஆட்ட நுணுக்கத்தையும் மேம்படுத்த கிடைத்த நல்ல வாய்ப்பாகும். வழக்கமாக தவறுகளை திருத்தி கொள்ளவும், புதிய திறன்களை கற்றுக்கொள்ளவும் நேரம் கிடைக்காது. ஏனெனில் அதற்கு அதிக நேரம் பிடிக்கும். எனவே கிடைத்து இருக்கும் இந்த நல்ல சமயத்தை புதிய நுணுக்கத்தையும், திறனையும் கற்றுக் கொள்வதற்கு பயன்படுத்தி வருகிறேன். ஒலிம்பிக் போட்டியில் எனது ஆட்டத்தில் நீங்கள் புதிய நுணுக்கங்களை பார்க்கலாம்.

இவ்வாறு சிந்துகூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »