Press "Enter" to skip to content

உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் விவகாரம்: மம்தா- பிரசாந்த் கிஷோர் மோதல்

பிரசாந்த் கிஷோரின் ‘ஐபேக்’ நிறுவனத்தின் ஒப்பந்தத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முறித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொல்கத்தா:

பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மேற்கு வங்காள மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் ஒப்பந்தம் செய்திருந்தார்.

கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி அமோக வெற்றி பெற்று 3-வது முறையாக முதல்-மந்திரி ஆனார். இதற்கு பிரசாந்த் கிஷோரின் அறிவுரைகள் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்பட்டது.

இந்தநிலையில் மம்தா பானர்ஜிக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேற்கு வங்காளத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பிரசாந்த் கிஷோரின் ‘ஐபேக்’ நிறுவனத்தின் ஒப்பந்தத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முறித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் கூறும் போது, ‘‘ஐபேக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வது தொடர்பாக எங்களது கட்சி விவாதித்து வருகிறது’’ என்றார்.

இந்த விவகாரம் குறித்து மம்தா பானர்ஜி எந்த கருத்தும் தெரிவிக்காமல் உள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »