Press "Enter" to skip to content

காக்கும் கடவுளாம் 18ம்படி கருப்பண்ணசாமி-ஆலயம் தேடி

ஆலயம் தேடி தொடரில் இன்று பார்க்கப்போற கோவில் மதுரைக்கு அருகில் இருக்கும் அழகர்மலை கோவிலின் காவல்தெய்வமான 18ம்படி கருப்பண்ணசாமி கோவிலை… இப்பகுதி த மக்கள் இந்த கருப்பசாமிமேல் மிகுந்த பக்தி கொண்டு மிகவும் பயபக்தியுடன் வணங்கி வருகின்றனர். அநியாயங்கள் செய்தால் கருப்பசாமி கேட்பார் என இந்த கருப்பசாமிக்கு பயமும் பக்தியும் அதிகம்.

மலையாள நம்பூதிரிகள்போல் கொண்டை, தலையில் பெரிய தலைப்பாகை, நெற்றியில் திருமண், முறுக்கிய மீசை, கையில் ஓங்கிய வீச்சரிவாள், மறுகையில் கதை, சங்கு முழங்காலுக்கும் கீழ வரும் இடுப்பு கச்சையுடன் நின்ற கோலத்தில், கருத்த தேகமும், குதிரைமீது அமர்ந்து மிரட்டும் விழிகளுடன் காட்சி யளிப்பார் கருப்பண்ண சாமி. கொடூர தோற்றங்கொண்டிருந்தாலும் இளகிய மனதுடன் பக்தர்களுக்கு அருள்பவர். நம்பியவருக்கு குழந்தைப்போலவும், எதிர்ப்பவர்களுக்கு எமனாகவும் திகழ்பவர். இவருக்கு பொய், புரட்டு, ஏமாற்று வேலைகள், இதெல்லாம் ஆகாது.

கேரளாவை ஆண்டு வந்த மன்னன் ஒருவன் தேசாந்திர பயணமாய் வந்தவர், பாண்டியர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட அழகர்கோவிலுக்கு வந்தான். பள்ளிக்கொண்டிருக்கும் அழகரின் அழகு அம்மன்னன் மனதை கொள்ளைக்கொண்டது. கள்ளழகரை தன்னுடைய நாட்டிற்கு கொண்டு செல்லவேண்டுமென ஆவல் கொண்டான். தன் நாட்டிற்கு பயணப்பட்ட கேரள மன்னன் உடனே ஒரு திட்டம் தீட்டி, மந்திர தந்திரங்களில் தேர்ச்சிப்பெற்ற 18 பேரை தேர்ந்தெடுத்து அழகர் சிலையை பெயர்த்தெடுத்து கேரளத்திற்கு கொண்டுவருமாறு பணித்தார்.

அந்த பதினெட்டு மந்திரவாதிகளும் மன்னனின் கட்டளையை நிறைவேற்ற அழகர்மலை வருவதற்கு ஆயத்தமானார்கள் . பதினெட்டு மந்திரவாதிகளுக்கு காவலாக மலையாள தேசத்தின் காவல் தெய்வமான கருப்பும், வெள்ளை குதிரை மீதேறி அவர்கள் முன்னே சென்றது. காவல் தெய்வத்தின் பின்னே இவர்கள் அழகர்மலை நோக்கி புறப்பட்டனர்.

அனைவரும் அழகர் மலையை அடைந்தனர். அழகர் மலையை அடைந்த காவல் தெய்வம் ,அழகரின் அழகில் மயங்கி தன்னை மறந்து நின்றது . அழகரின் ஆபரணங்களையும், அங்கு கொட்டிக்கிடந்த பக்தர்களின் காணிக்கையையும்  கண்ட 18 பேருக்கும் அழகரோடு, அந்த செல்வத்தையும் கொள்ளையடிக்கும் எண்ணம் உண்டானது. வந்தவர்களின் கெட்ட நோக்கத்தை கண்ட பக்தர் ஒருவர் ,ஊரில் உள்ள மக்களிடம் சொல்ல ,மக்கள் அனைவரும் திரண்டு வந்து ,அந்த 18 பேரையும் கொன்று ,களிமண்ணால் படிகள் செய்து ,படிக்கு ஒருவராக பதினெட்டு படிகளிலும் பதினெட்டு பேரையும் புதைத்தனர் .
தன்னிடம் மயங்கி நின்ற காவல் தெய்வத்திற்கு கருணை புரிய நினைத்த இறைவன் கேரளத்து காவல் தெய்வமான  கருப்பசாமிக்கு காட்சி தந்து, அருள் புரிந்து ,வரம் தந்து ,”என்னையும் மலையையும் காவல் புரிந்து வருவாய் என அருள் புரிந்தார் “. கோவில் மட்டுமல்லாது ஊர்மக்களையும், மக்களின் சொத்துக்கலையும்18 பேருடன் வந்த தெய்வமாதலால் ,பதினெட்டு படிகளின்மீது நின்று காவல் தெய்வமாய் காட்சி தந்தார் . ஒருநாள் கோவில் பட்டர் கனவில் தோன்றிய கருப்பசாமி ,திருமால் பள்ளிகொண்ட திருவாயிலையும், மலையையும்  அழகர் கட்டளைப்படி காத்து நிற்பேன். அதற்கு பிரதி உபகாரமாக ,திருமாலின் அர்த்த ஜாம பூஜை பிரசாதங்களை தனக்கு படைக்குமாறு வேண்ட அன்று முதல் அழகருக்கு படைக்கப்படும் அர்த்த ஜாம பூஜை பிரசாதங்கள் பதினெட்டாம் படி கருப்பசாமிக்கு படைக்கப்படுகிறது .

ஒருசமயம் பெரியாழ்வாருடன் இத்தலத்திற்கு விஜயம் செய்த ஆண்டாள் பதினெட்டு படிகளை கண்டு வியந்ததாக செவிவழி செய்தியும் உண்டு.  ஒவ்வொரு நாளும் அழகர்மலை கோவில் பூட்டபட்டதும் ,கதவின் சாவி பதினெட்டாம் படி கருப்பசாமியின் முன்பு வைத்துவிட்டு செல்வர். மறுநாள் காலை கோவில் திறக்கும் முன் ,பட்டர் கருப்பசாமியிடம் அனுமதி பெற்று கதவை திறக்கும் சம்பிரதாயம் இன்று வரை நடைபெற்று வருகிறது .
சித்திரை திருவிழாவிற்கு அழகர் ,மதுரைக்கு புறப்படும்போதும் ,மதுரையிலிருந்து கோவிலுக்கு திரும்பும்போதும் அழகர் அணிந்த நகைகள் எண்ணப்பட்டு ,அந்த பட்டியல் பதினெட்டாம் படி கருப்பசாமி முன்பு படித்து காட்டப்படும் .கோவில் நகைகளை காவல் தெய்வம் கருப்பசாமியே பாதுகாத்து வருகிறார் என்பது பல காலமாக தொடர்ந்து வரும் நம்பிக்கை.  அந்த நம்பிக்கை இன்றுவரை இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது . கள்ளழகருக்கு காவல் புரியும் கருப்பணசாமியை மக்கள் தங்கள் குல தெய்வமாக கொண்டு வழிபட்டு வருகின்றனர் .இன்றும் பதினெட்டாம் படி கருப்பசாமி முன் பல வழக்குகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. கருப்பசாமியிடம் முறையிட்டால் நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்பது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை. 
கருப்பண்ண சாமி கோவில் வாயில் எப்போதும் மூடப்பட்டே இருக்கும். வருடத்திற்கு ஒருநாள் மட்டுமே திறக்கப்படும். மற்றப்படி வேண்டுதல், நேர்த்திக்கடன் எல்லாமே அந்த பூட்டிய கதவுக்குதான். கதவு இடுக்கின்வழியே ஆலயத்தின் உள்ளே பார்ப்பவர்களின் பார்வை கருப்பசாமியால் பறிக்கப்படுமென்பது இங்கு உலவும் நம்பிக்கை
 
 The post காக்கும் கடவுளாம் 18ம்படி கருப்பண்ணசாமி-ஆலயம் தேடி appeared first on Tamil Minutes.
Source: TamilMinutes

More from திரையுலகம்More posts in திரையுலகம் »