Press "Enter" to skip to content

கணினிமய வகுப்புகளுக்கு ஆர்.ஜே. பாலாஜி எதிர்ப்பு

கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதற்கு நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்த ஆர்.ஜே.பாலாஜி, தற்போது கதாநாயகனாகவும், இயக்குநராகவும் வளர்ந்துள்ளார். அவரது இயக்கத்தில், நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் உருவாகி வருகிறது. 

தனது கருத்துக்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் ஆர்.ஜே.பாலாஜி, ஆன்லைன் வகுப்புகள் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், “கடந்த சில மாதங்களா நம்ம சுத்தி நடக்குற விஷயங்கள் எல்லாம் நமக்கு மன அழுத்தத்தை கொடுக்குது. அதில கடந்த சில வாரமா சின்ன குழந்தைங்களுக்கு ஆன்லைன் கிளாஸ் என்ற பெயரில் 8 மணி நேரம், 9 மணி நேரம் குழந்தைங்களுக்கு கிளாஸ் வைக்கும் போது உடல்அளவிலும், மனதளவிலும் ஏற்படுகிற அழுத்தத்தை அவங்களால எப்படி சமாளிக்க முடியும்?

இத்தனை நாளா அம்மா அப்பா, ‘போன் பாக்காத, டிவி பாக்காத’ன்னு சொல்லி வளர்த்த நிலையில இப்போ ‘போன பாரு, டிவிய பாரு’ன்னு அவங்க சொல்லும்போது மாணவர்களுக்கும் கஷ்டமா இருக்கும். பெரியவங்களுக்கே ரொம்ப நேரம் போனும், கம்ப்யூட்டரும் பார்த்து வேலை செய்தா பிரச்சினைகள் ஏற்படும்னு மனநல மருத்துவர்கள் சொல்லும்போது சின்ன குழந்தைங்க எப்படி இதை சமாளிப்பாங்க.

நாம இப்போ கிளாஸ் எடுத்தா தான் பீஸ் கேக்க முடியும், வருஷம் போகுதே, பாடங்களை முடிக்கணுமேன்னு பள்ளி, கல்லூரிகள் யோசிக்கிறது நியாயமா இருந்தாலும், அதுக்கு தீர்வு இதுவா? காலங்காலமா 8 மணி நேர வகுப்புன்னு ஸ்கூல்ல இருந்தத ஆன்லைன் கிளாசுக்கு நடைமுறை படுத்துறது சரியான்னு பாத்துக்கோங்க. 

ஆசிரியர்களுக்குமே இது பெரிய அழுத்தம் தான். பிற மாநிலங்களில் கிளாஸ் எடுப்பதை வீடியோ ரெக்கார்ட் செய்து குழந்தைகளுக்கு அனுப்பி வைக்கிறாங்க. மாணவர்களும் விரும்பும் நேரத்தில் அதைப் பார்க்கின்றனர். மீண்டும் இது குறித்து யோசித்துப் பாருங்க” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »