Press "Enter" to skip to content

யோகிபாபுவால் பணம் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானேன் – தௌலத் தயாரிப்பாளர்

முன்னணி காமெடி நடிகர் யோகிபாபுவால் பணம் இழந்து மன உளைச்சலுக்கு ஆளானேன் என்று தௌலத் படத்தின் தயாரிப்பாளர் முகம்மது அலி கூறியுள்ளார்.

ரைட் ஆர்ட்ஸ் நிறுவனம் முகம்மது அலி தயாரிப்பில் சக்தி சிவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘தௌலத்’. இந்த திரைப்படத்தை பற்றி யோகிபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட செய்தியால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த டுவிட்டர் செய்தியில், தனக்கும் ‘தௌலத்’ படத்திற்கும் எந்த வித சம்பந்தமுமில்லை; நான் நடிக்கவும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இதுபற்றி தயாரிப்பாளர் முகம்மது அலி கூறும்போது, ‘தௌலத்’ படத்தை தயாரிக்க முடிவு செய்தபோதே, இப்படத்தின் முக்கியத் திருப்பமாக கதாநாயகனும், வில்லனும் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும் காட்சியில் யோகிபாபுவைத் தான் நடிக்க வைக்க வேண்டுமென்று தீர்மானித்து தான் நடிக்க வைத்தோம். அவரும் நல்லபடியாக நடித்துக் கொடுத்தார். ஆனால், அதன்பின் அவர் நடித்த பல படங்கள் வரிசையாக வெற்றி பெற்று பரபரப்பான நடிகராக மாறினார். 

அவர் நடித்த காட்சிக்காக டப்பிங் பேச வராமலும் இழுத்தடித்தார். நானும் அவருக்காக 9 மாதங்கள் காத்திருந்தேன். அதன்பின்தான் டப்பிங் பேசி கொடுத்தார். அவர் முன்பே டப்பிங் பேசி முடித்து இருந்தால் எப்போதோ வெளியாகியிருக்க வேண்டிய படம். அவர் குறித்த நேரத்தில் டப்பிங் பேசாததால் படம் வெளியாக தாமதமாகி மன உளைச்சலும் பண இழப்பும் ஏற்பட்டது. 

ஆனால், அதையும் விட நடித்துவிட்டு இப்போது நான் நடிக்கவில்லை என்று கூறியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. ஒரு நிறுவனத்திடம் விலைபேசி இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தேன். ஆனால், இந்த செய்தி என்னை இடிபோல் தாக்கிவிட்டது. மேலும், அவர் கூறியது போல் அவர் புகைப்படத்தை மட்டும் போஸ்டரில் போட்டு நாங்கள் விளம்பரம் செய்து சம்பாதிக்க நினைக்கவில்லை. அப்படி செய்யவும் மாட்டோம். நான் சம்பளம் கொடுத்து நடிக்க வைத்த ஒரு நடிகர் தன்னை விளம்பரம் செய்யக்கூடாது என்று கூறுவது சரியா? தர்மமா? நியாயமா? யார் மீதோ உள்ள காழ்ப்புணர்ச்சியால் என் மீது பாய்ந்துள்ளார். யோகி பாபு மீது எனக்கு எந்த வருத்தமுமில்லை. எந்த நடிகரும் இதுபோல் எந்த தயாரிப்பாளர் வயிற்றிலும் அடிக்க வேண்டாம்’ என்றார்.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »