Press "Enter" to skip to content

வித்யா பாலனை இரவு விருந்துக்கு அழைத்த மந்திரி – செல்ல மறுத்ததால் படப்பிடிப்புக்கு தடை விதித்ததாக புகார்

மத்திய பிரதேச மாநில மந்திரியின் இரவு விருந்துக்கு செல்ல மறுத்ததால் நடிகை வித்யா பாலனின் படப்பிடிப்புக்கு வனத்துறை தடை விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் வித்யா பாலன். இவர் தற்போது ‘ஷெர்னி’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலம் பால்காட் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை வித்யா பாலன் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அங்கு சென்றிருந்தார். 

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய பிரதேச மாநில வனத்துறை மந்திரி விஜய் ஷா நடிகை வித்யா பாலனை இரவு விருந்துக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் செல்ல மறுத்து விட்டதாக தெரிகிறது. 

இதையடுத்து வனப்பகுதியில் படப்பிடிப்புக்கு சென்ற படக்குழுவினரின் வாகனங்களை பால்காட் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். 2 வாகனங்கள் மட்டுமே வனப்பகுதிக்குள் செல்ல அனுமதித்தனர். இதனால் படக்குழுவினரால் வனப்பகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அங்கு நடைபெற இருந்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. 

நடிகை வித்யா பாலன் அமைச்சரின் இரவு விருந்துக்கு செல்ல மறுத்ததால் தான் படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

ஆனால், இதை மறுத்துள்ள அமைச்சர் விஜய் ஷா, ‘படப்பிடிப்புக்கு அனுமதி கேட்க ‘ஷெர்னி’ படக்குழு என்னை அணுகினர். அவர்கள் தான் என்னை இரவு விருந்துக்கு அழைத்தனர். மகாராஷ்டிரா வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என கூறினேன். நான் படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிடவில்லை’ என்றார். 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »