Press "Enter" to skip to content

பழைய காதலியை பார்க்க செல்வதைப் போல இருந்தது – தி நகர் குறித்து வசந்தபாலன் உருக்கம்

தி நகர் சென்றபோது ‘கண்ணில் தெரியும் வானம் கையில் வராதா’ என்ற அங்காடித்தெரு பாடல் மனதிற்குள் ஒலித்துக் கொண்டிருந்ததாக வசந்த பாலன் தெரிவித்துள்ளார்.

வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த படம் ‘அங்காடித் தெரு’. சென்னை, தி நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபல ஜவுளிக்கடைகளில் வேலை செய்யும் ஆண்கள், பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை வெளிச்சம் போட்டு காட்டிய இப்படம், நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தி நகர், ரங்கநாதன் தெருவுக்குச் சென்றதைப் பற்றி இயக்குனர் வசந்த பாலன் தனது முகநூல் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

அதில், “புதிய திரைப்படத்தின் ஆடை அலங்காரப்பொருட்கள் வாங்குவதற்காக வேறு வழியின்றி 13 வருடங்களுக்கு பிறகு பழைய காதலியைப் பார்க்க செல்வதைப் போல இன்று ரங்கநாதன் தெருவுக்குள் நுழைந்தேன். அரை மணி நேரத்தில் சுடிதார் தைத்து தருகிறோம் என்கிற பெண்களின் குரல் என்னை வரவேற்றது. 

வீட்டுக்குள் வானம் என்று விற்பனை செய்கிற ராஜாவையும், சமோசா விற்கும் பெரியவரையும், கர்ச்சீப் விற்கும் அப்துலையும் கண்டேன். மனம் அங்காடித்தெரு சூட்டிங் நாட்களை புரட்டிப் பார்த்தது. இன்று ரங்கநாதன் தெருவில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இளநீர் குடிக்க நான் முகக்கவசத்தை கழட்டும் போது ஓரிருவர் கண்டு கொண்டு, சிறை வெளியீடு பற்றி விசாரித்தார்கள். 

ஒரு ஜவுளிக்கடையில் கதாநாயகிக்கு சுடிதார் வாங்க நின்றபோது மானேஜர் ஒருவர் அங்கு வேலை செய்யும் பெண்களை சகட்டுமேனிக்கு திட்டிக் கொண்டிருந்தார். வசவு சொற்களைக் கேட்க சகிக்காமல் தெருவை விட்டு வெளியே வந்தேன். கண்ணில் தெரியும் வானம் கையில் வராதா என்ற அங்காடித்தெரு பாடல் மனதிற்குள் ஒலித்துக் கொண்டிருந்தது”. என அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »