Press "Enter" to skip to content

நான் படத்தில் நகைச்சுவைக்காக சொன்னது…. இப்போ நிஜத்தில் நடக்குது – வடிவேலு

கொரோனாவை எல்லோரும் சேர்ந்து, அரசு சொல்வதை கேட்டு வீட்டை விட்டு வெளியே வராமல் தொட்டு பேசாமல் வெல்வோம் என வடிவேலு தெரிவித்துள்ளார்.

தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஓப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை.

இந்நிலையில், கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர் வடிவேலு பேசியிருப்பதாவது: “கொரோனாவால் பீதி ஏற்பட்டு உள்ளது. வெளியே போக கூடாது. யாரையும் தொட்டு பேசக்கூடாது. கை கொடுக்க கூடாது என்கின்றனர். மருத்துவ உலகத்தையும், மனித உலகத்தையும் மிரட்டி வைத்துள்ளது கொரோனா. இந்த மாதிரி யாருமே பார்த்தது இல்லை.

என்னிடம் ஒரு அம்மா எப்போது நடிக்க போகிறீர்கள் என்று கேட்டார். இப்போது நடிக்க வருவதற்கும் படம் எடுப்பதற்கும் ஆள் தயாராக இல்லை. படம் பார்க்க வருவதற்கும் யாரும் இல்லை. அப்புறம் எப்படி நான் தனியாக போய் நடிப்பது. இறைவன் கொரோனா என்ற ஒரு படத்தை வெளியீடு செய்து இருக்கிறான். கொரோனா படத்தை இறைவன் எப்போது தூக்குவான் என்றே தெரியவில்லை. 

அதை தூக்கினால்தான் எல்லோரும் வெளியே வர முடியும். ஒரு படத்தில் சும்மா உட்காருவது எவ்வளவு கஷ்டம் என்று சவால் விட்டு நடித்து இருந்தேன். அதை நகைச்சுவையாகத்தான் செய்தேன். ஆனால் உண்மையிலேயே எல்லோரும் சும்மா உட்கார்ந்தால் எப்படி இருக்கும் என்று உணர வைத்து இருக்கிறான் இறைவன். பயம் வேண்டாம். கொரோனாவை எல்லோரும் சேர்ந்து, அரசு சொல்வதை கேட்டு வீட்டை விட்டு வெளியே வராமல் தொட்டு பேசாமல் வெல்வோம்”. இவ்வாறு வடிவேலு கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »