Press "Enter" to skip to content

வைரமுத்துவின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் மின்னுகிறது – முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

கவிஞர் வைரமுத்துவுக்கு ஓ.என்.வி. விருது வழங்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. இலக்கிய விருது. இதுவரை மூத்த மலையாளப் படைப்பாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்து, இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

முதல் முறையாக மலையாளி அல்லாத ஒரு இலக்கியவாதிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இது அகில இந்திய அளவில் வழங்கப்படும் தேசிய விருதாகும். இந்த விருது ஒரு சிலை, ஒரு தகுதி பட்டயம் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப்பரிசு கொண்டதாகும். 

இந்த விருது குறித்து கவிஞர் வைரமுத்து கூறியதாவது: “ஓ.என்.வி குறுப் இலக்கிய விருது பெறுவதை பெரும் பெருமையாக கருதுகிறேன். நான் பெரிதும் மதிக்கும் இலக்கிய பூமியான கேரளத்தில் இருந்து இந்த விருது வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. தமிழுக்கு சகோதர மொழி சூட்டிய மகுடமாக நான் இதைக் கருதுகிறேன்.

மலையாளத்தின் காற்றும் தண்ணீரும் கூட இலக்கியம் பேசும். அந்த மண்ணில் இருந்து பெறும் விருதை மகுடமாக கருதுகிறேன். வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டாலும் இந்திய இலக்கியம் ஒன்று தான். இந்த உயரிய விருதினை உலகத் தமிழர்களோடும், சக படைப்பாளிகளோடும் பகிர்ந்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மு.க.ஸ்டாலின்

இதனிடையே, கவிஞர் வைரமுத்துவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின்,  “தமிழ்நாட்டின் பெருமைக்குரிய இலக்கியவாதியான கவிப்பேரரசு வைரமுத்துவின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் மின்னுவது போல கேரளத்தின் புகழ்மிகு ஓ.என்.வி விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விருது வைரமுத்துவின் தமிழாற்றல் எல்லைகளை விரிவுபடுத்தி உலகளாவிய விருதுகளை நோக்கிய அவரது பயணத்திற்கான பாதையை வகுத்திருப்பதாக” அவர் பாராட்டியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »