Press "Enter" to skip to content

‘கைதி 2’ படத்திற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் – தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

கைதி படத்தை பிற மொழிகளில் மறுதயாரிப்பு செய்யவும் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் தடை விதித்து கொல்லம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் கைதி. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் 2 ஆம் பாகம் உருவாக இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனிடையே, கேரள மாநிலம் கொல்லம் நீதிமன்றத்தில் ராஜீவ் ரஞ்சன், என்பவர் கைதி படத்தின் கதை தன்னுடையது என்றும் இதனால் தனக்கு நஷ்ட ஈடாக 4 கோடி ரூபாயை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வழங்க வேண்டுமெனவும் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த நீதிபதி, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கு அறிவிப்பு அனுப்ப உத்தரவிட்டதோடு கைதி படத்தை பிற மொழிகளில் மறுதயாரிப்பு செய்யவும் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் தடை விதித்தது.

இந்நிலையில், அதுகுறித்து கைதி படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:  “எங்களின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் கதை, திரைக்கதை, இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி திரைப்படத்தின் மறுதயாரிப்பு மற்றும் இரண்டாம் பாகம் தயாரிக்க, கேரள நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். 

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

இது சம்மந்தமாக ஊடக நண்பர்கள் எங்களை தொடர்பு கொண்டு கருத்து கேட்டும் வருகின்றனர். எங்களுக்கு அவ்வழக்கின் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரியாத காரணத்தால் அதைப்பற்றிய விபரங்கள் எதுவும் தற்போது வெளியிட இயலாது. 

அதே சமயம் கைதி சம்மந்தப்பட்ட ஊடக செய்திகளில் எங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கவோ, சட்டப்படி இதை நிரூபிக்கவோ முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்”. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »