Press "Enter" to skip to content

இன்று சென்னை வருகிறார்…! பிரதமர் மோடி…!

பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த விமான முனையம், சென்னை  கோவை இடையே ‘வந்தே பாரத்’ தொடர் வண்டிசேவை உள்ளிட்ட  பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி தலைநகர் சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  விமான நிலையம், சென்ட்ரல் தொடர் வண்டிநிலையம் உள்ளிட்ட இடங்கள் காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தனி விமானம் மூலமாக இன்று மதியம் சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி முதலில், சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையத்தின் கட்டிடத்தை திறந்து வைக்கிறார். பின்னர் சென்ட்ரல் தொடர் வண்டிநிலையத்தில் தமிழ்நாட்டின் முதல் ‘வந்தே பாரத்’ தொடர் வண்டிசேவையை தொடங்கி வைக்கிறார். பின்னர் பல்லாவரம் கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையம், சென்ட்ரல் தொடர் வண்டிநிலையம், பல்லாவரம் கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட இடங்கள் காவல் துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.  வாகனங்கள் மற்றும் பயணிகள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.  மேலும், பிரதமர் பயணம் செல்லும் இடங்களில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  சென்னையில் மட்டும் 22 ஆயிரம் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

பிரதமரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னை மட்டும் தாம்பரம் மாநகராட்சிகளில்  ட்ரோன்கள் மற்றும் பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும், ராமகிருஷ்ண மடத்தில் பிரதமர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி, மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதனை யடுத்து, மெரினா கடற்கரைக்கு செல்ல பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே, பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.  ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்து, பிரதமர் மோடி ஜனநாயகத்தை சிதைத்து விட்டதாகக் கூறி காங்கிரஸ் கட்சி இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. 

மேலும், தமிழக வாழ்வுரிமை கட்சியும் புதிய நிலக்கரி திட்ட அறிவிப்பை எதிர்த்து பிரதமரின் வருகைக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »