Press "Enter" to skip to content

கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட சிறப்பு முகாம் நீட்டிப்பு இல்லை?

நீட் தடுப்புச் சுவர் உடைபடும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அவ்வறிக்கையில்,மாணவர்களின் மருத்துவக் கல்லூரி கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசைக் கண்டித்தும் – அதற்குத் துணைபோகும் ஆணவம் பிடித்த ஆளுநரைக் கண்டித்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட உண்ணாநிலை அறப்போராட்டம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

காலை தொடங்கி மாலை வரையிலான இப்போராட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக உடன்பிறப்புகள், அணிகளின் செயல்வீரர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மட்டுமல்லாமல் ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் பங்கெடுத்திருப்பதையும் ஊடகங்களின் வாயிலாகப் பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் என தெரிவித்துள்ள அவர், நீட் தேர்வை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையானது அரசியல் கோரிக்கையல்ல; அது கல்விக் கோரிக்கை. அதிலும் குறிப்பாக, சமூகச் சமத்துவக் கல்வியை விரும்பும் அனைவரது கோரிக்கை எனக் கூறியுள்ளார்.

நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் எதிர்த்தது நாம் சிலர்தான் எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இன்று இத்தேர்வின் கொடூரத் தன்மையை அனைவரும் அறிந்து விட்டார்கள். அதனால்தான் கட்சி எல்லைகளைக் கடந்து இத்தேர்வுக்கு எதிரான முழக்கம் நாடு முழுவதும் கிளம்பி வருகிறது. இவர்களது ஆதரவையும் சேர்த்து இப்போராட்டம் வெளிப்படுத்திவிட்டது என தெரிவித்துள்ளார்.

 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் பங்கெடுக்கும் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்றால், நீட் தேர்வு நிச்சயம் தமிழ்நாட்டில் இருக்காது என உறுதியளித்துள்ள அவர், ஒன்றியத்தின் புதிய 

ஆட்சியில் நீட் தேர்வு நிச்சயம் இருக்காது என்பதை, தேர்தல் வாக்குறுதியாகவே அளிக்க வைப்போம் என தெரிவித்துள்ளார்.

இப்படி ஒரு வாக்குறுதியை அ.தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வும் தர முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ள அவர், ஏழை – எளிய – விளிம்பு நிலை – நடுத்தர – ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைப்பதுதான் பா.ஜ.க.வின் உண்மையான நோக்கம். ஊழலுக்கு எதிரானவர்களைப் போல நடித்துக் கொண்டு, தனியார் பயிற்சி நிறுவனங்கள் கோடிகளில் புரளப் பச்சைக்கொடி காட்டிக் கொண்டிருப்பது ஒன்றிய பா.ஜ.க. 

ஆட்சி. இவர்களது ஊழல் வண்டவாளங்கள்தான் சி.ஏ.ஜி. அறிக்கையில் சிரிப்பாய் சிரிக்கிறதே என குற்றம் சாட்டியுள்ளார். 

தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொழிக்கவும், அப்பாவி மக்களை நசுக்கவும் ஒன்றிய பா.ஜ.க. அரசால் நடத்தப்படும் நீட் தேர்வை அ.தி.மு.க.வின் அடிமை 

ஆட்சிக்காலம் ஆரம்பக் காலத்திலேயே எதிர்த்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது என குறிப்பிட்டுள்ள அவர், பா.ஜ.க.வின் பாதம்தாங்கிகளான அடிமை அ.தி.மு.க. கூட்டம், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஒன்றிய அரசால் திருப்பி அனுப்பப்பட்ட தகவலையே சட்டமன்றத்திற்குச் சொல்லாமல் வாயைப் பொத்திக் கிடந்தது எனவும்  தங்களது நாற்காலி காப்பாற்றப்பட்டால் போதும் யார் நாசமானால் என்ன என்று நினைத்து தரையில் விழுந்து கிடந்தார்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். 

என்னைப் பொறுத்தவரையில், நான் நம்பிக்கை இழக்கவில்லை. நீட் என்பது ஏதோ மாற்ற முடியாத அரசியலமைப்புச் சட்டமல்ல என நம்பிக்க தெரிவித்துள்ள முதலமைச்சர், நீட் தேர்வும் ரத்தாகும். நீட் தடுப்புச் சுவர் உடைபடும் காலம் வெகுதூரத்தில் இல்லை என தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »