Press "Enter" to skip to content

அனைத்துக் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை..!

வாக்காளர் விண்ணப்ப படிவங்கள் விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைத்து கட்சிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக  சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.  அதன் ஒரு பகுதியாக, வருகின்ற 27-ம் தேதி தமிழ்நாடு முழுவதும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்தார். 

இது தொடர்பாக புதன்கிழமை  சென்னை தலைமைச் செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டார். 

இதில்,  திமுக, அதிமுக, காங்கிரஸ் பாஜக, தே.மு.தி.க.,  கம்யூனிஸ்ட், வி.சி.க., ஆம் ஆத்மி, உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.  மேலும் தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும் அனைத்து  கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

 

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களில் பெண்களுக்கு கழிவறை வசதிகள் செய்து தர வேண்டும் என்றும், இரட்டை பதிவை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறினார். 

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் இன்னமும் நீக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் வாக்காளர் பெயர் சேர்ப்பு , நீக்கல்  படிவங்கள் விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைத்து கட்சிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதாக ஜெயகுமார் கூறினார்.

வாக்குச்சாவடியின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், வாக்களிக்க வரும் பெண்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கோரியிருப்பதாக காங்கிரஸ் கட்சி சார்பில் பங்கேற்ற நவாஸ் தெரிவித்தார்.

பூத் அளவில் ஏஜெண்ட்களை நியமனம் செய்து, தேர்தல் ஆணையத்திடம் வழங்கிய பட்டியலை, தேர்தல் ஆணைய வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வலியுறுத்தியதாக பாஜக துணைத்தலைவர் கராத்தே தியாகராஜன் தெரிவித்தார். 

18 வயதான இளம் வாக்காளர்களை உடனடியாக பட்டியலில்  சேர்க்க வேண்டும் என கோரிக்கை வதை்ததாக தேமுதிக தலைமை நிலைய செயலாளர்  பார்த்தசாரதி தெரிவித்தார். 

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பங்கேற்ற வீரபாண்டி தெரிவித்தார். 

இதையும் படிக்க  }  “ஆளுநர் மாளிகையில் குண்டு வீச்சு: சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிக்கிறது” – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »