Press "Enter" to skip to content

ரமணா பட பாணியில் நடந்த கொடூர சம்பவம்…!

தூத்துக்குடியில் இளம் தம்பதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தந்தை உள்பட 3 பேரை கைது செய்து தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் தூத்துக்குடி முருகேசன்நகர் 1-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் மாரிசெல்வம் (24). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் சூப்பிரவைசராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும், தூத்துக்குடி திரு.வி.க.நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் கார்த்திகா(20) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இவர்கள் 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது, இவர்களது காதலுக்கு கார்த்திகா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனைத்தொடர்ந்து கடந்த 30-ந் தேதி மாரிசெல்வம், கார்த்திகாவை அழைத்துச் சென்று கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து உள்ளார். 

அதன்பிறகு கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் 2 பேரும் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர், தொடர்ந்து புதுமண தம்பதிகள் 2 பேரும் கோவில்பட்டியிலேயே தங்கி இருந்துள்ளனர்.

பின்னர் திருமணமாகி 3 நாட்களுக்கு பிறகு நேற்று காலையில் காதல் தம்பதியினர் முருகேசன்நகரில் உள்ள மாரிசெல்வத்தின் வீட்டுக்கு வந்து உள்ளனர். இதனையறிந்து மாரி செல்வத்தின் வீட்டுக்கு நேற்று மாலை 3எந்திர இருசக்கரக்கலன் (பைக்)குகளில் வந்த 6 மர்ம நபர்கள், மாரிச்செல்வம்- கார்த்திகா ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதில் இருவரின் கழுத்துக்கள் அறுக்கப்பட்ட நிலையில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தடவியல் நிபுணர்களும் மோப்பநாய் ஜினோ வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணியானது துவங்கியது.

இது குறித்து சிப்காட் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில், கொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்தார்.

இந்த நிலையில், கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம், உறவினரான கருப்பசாமி  மற்றும் பரத் ஆகிய மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் படுகொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம் தம்பதி கொலை வழக்கில், பெண்ணின் தந்தையே கைதாகி இருப்பதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »