Press "Enter" to skip to content

‘ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை’ திட்டம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை’ திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை:

மத்திய நுகர்வோர் நலன் மற்றும் பொதுவினியோக அமைச்சகம், அனைத்து ஞாயவிலைக்கடைகளையும் கணினி மயமாக்குவதற்காக ஒருங்கிணைந்த மேலாண்மை பொதுவினியோக திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள ஞாயவிலைக்கடைகள் அனைத்தும், ஒரே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும். ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள், இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள ஞாயவிலைக்கடையிலும் பொருட்கள் வாங்க முடியும். இந்த திட்டம் தான் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை’ என்று அழைக்கப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது ஸ்மார்ட் ரேஷன் கார்டை ‘ஸ்கேன்’ செய்து அதன்மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து சோதனை அடிப்படையில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை’ திட்டம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த ஜனவரி 1-ந்தேதியில் இருந்து பிப்ரவரி 29-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் இன்று முதல் தமிழகத்தில் 32 மாவட்டங்களில் அமல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில் இருந்து இன்று தொடங்கி வைத்தார்.

திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், கரூர், திருப்பூர், நெல்லை, தர்மபுரி, வேலூர், நாமக்கல், நீலகிரி, திருப்பத்தூர், தேனி, திருவள்ளூர், ஈரோடு, காஞ்சிபுரம், திருவாரூர், வடசென்னை, தென்சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம், தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், சிவகங்கை, திண்டுக்கல், கடலூர் ஆகிய 32 மாவட்டங்களில் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இதுதவிர தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் வருகிற 15-ந்தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதுதொடர்பாக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

முதல் கட்டமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் இந்த திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »