Press "Enter" to skip to content

குடியுரிமை திருத்த சட்டத்தால் ‘யாருடைய குடியுரிமையும் பறிபோகாது’ – அமித்‌ஷா உறுதி

குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறிபோகாது என உள்துறை மந்திரி அமித்‌ஷா உறுதிபட தெரிவித்தார்.

கொல்கத்தா:

மத்திய உள்துறை மந்திரி அமித்‌ஷா ஒரு நாள் பயணமாக நேற்று மேற்கு வங்காளம் சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ‌ஷாகித் மினார் மைதானத்தில் மிகப்பெரும் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றார்.

மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் நோக்கிலும், இந்த தேர்தலில் மம்தா பானர்ஜி அரசை வெளியேற்றும் வகையிலும், ‘இனியும் தவறான செயல்கள் வேண்டாம்’ என்ற பெயரில் பா.ஜனதா சார்பில் புதிய இயக்கம் ஒன்று நடத்தப்படுகிறது. இந்த இயக்கத்தையும் அமித்‌ஷா இந்த பொதுக்கூட்டத்தில் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காள மக்களின் ஆசியால் பா.ஜனதாவுக்கு 300-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைத்து உள்ளன. மோடி அரசு வெற்றிகரமாக குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியதன் காரணமே மேற்கு வங்காளம்தான்.

என்னை பொறுத்தவரை, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்படும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்தர்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்குவதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறிபோகாது என சிறுபான்மை மக்களுக்கு, குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்.

ஆனால் இந்த சட்டம் தொடர்பாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தவறான தகவல்களை கொடுத்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகின்றன. மதரீதியாக துன்புறுத்தப்பட்டதால் அகதியாக வந்தவர்களுக்கு 70 ஆண்டுகளாக குடியுரிமை வழங்க காங்கிரசால் முடியவில்லை.

ஆனால் அவர்களுக்கு மோடி அரசு குடியுரிமை வழங்க முன்வரும்போது காங்கிரசும், திரிணாமுல் காங்கிரசும் மக்களை தவறாக வழிநடத்துகின்றன. எனினும் அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமை வழங்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்.

மாநிலத்தில் மம்தா பானர்ஜி அரசு திருப்திபடுத்தும் கொள்கை மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது. எனவே 2021-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவை மக்கள் ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு அமித்‌ஷா கூறினார்.

முன்னதாக இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமித்‌ஷா சென்றபோது அவருடன் சென்ற பா.ஜனதா தொண்டர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து கோ‌‌ஷங்களை எழுப்பினர். அப்போது, ‘துரோகிகளை சுட்டுத்தள்ளுங்கள்’ எனவும் அவர்கள் கோ‌‌ஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு கமாண்டோ படையினருக்கு கொல்கத்தாவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் ஒன்றை அமித்‌ஷா திறந்துவைத்தார். இதில் பேசும்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டக்கொள்கை மோடி ஆட்சியின் கீழ் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இதற்காக தேசிய பாதுகாப்பு கமாண்டோ படையினருக்கு நவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானில் இந்தியா மேற்கொண்ட சர்ஜிக்கல் தாக்குதல் மற்றும் பாலகோட்டில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலுக்கு முன்புவரை, பயங்கரவாதிகளின் இருப்பிடத்துக்கு சென்று தாக்குதல் நடத்தும் திறன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு மட்டுமே இருப்பதாக உலக நாடுகள் கருதி வந்தன. ஆனால் இந்த தாக்குதல்களுக்கு பிறகு, இந்தியாவும் அந்த பட்டியலில் இணைந்து இருக்கிறது.

இவ்வாறு அமித்‌ஷா கூறினார்.

இதற்கிடையே அமித்‌ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் பல இடங்களில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் போராட்டம் நடத்தின. குறிப்பாக அமித்‌ஷா வருகையை முன்னிட்டு கொல்கத்தா விமான நிலையத்தில் குவிந்த இடதுசாரி தொண்டர்கள் பலர், கருப்பு கொடியை காட்டியும், ‘திரும்பிச் செல்லுங்கள்’ என்ற கோ‌‌ஷத்தை எழுப்பியும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »