Press "Enter" to skip to content

அப்போ டிராவிட் பண்ணாரு; கரெக்ட்டுதான்.. ஆனால் இந்த காலத்துக்கு அதெல்லாம் செட் ஆகாது.. கபில் தேவ் அதிரடி

தோனிக்கு பிறகு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட், விக்கெட் கீப்பிங்கில் சொதப்பியதால், முதலில் டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு ரிதிமான் சஹாவே மீண்டும் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டுவருகிறார். 

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்துவந்த ரிஷப் பண்ட், தொடர்ச்சியாக விமர்சனங்களுக்கு ஆளாகிவந்தார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் காயமடைந்ததால், அந்த போட்டியில் அவரால் விக்கெட் கீப்பிங் செய்யமுடியாமல் போனதையடுத்து, கேஎல் ராகுல் கீப்பிங் செய்தார். 

கேஎல் ராகுல் அந்த வாய்ப்பை பயன்படுத்தி அருமையாக விக்கெட் கீப்பிங் செய்ததை அடுத்து, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் முழுவதுமே ராகுல் தான் விக்கெட் கீப்பிங் செய்தார். ராகுலின் விக்கெட் கீப்பிங்கை குறைகூறுவதற்கு எதுவுமில்லை. ரிஷப் பண்ட்டை விட சிறப்பாகத்தான் விக்கெட் கீப்பிங் செய்தார். 

எனவே ராகுலே விக்கெட் கீப்பராக தொடர்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 2003 உலக கோப்பை சமயத்தில் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இல்லாததை அடுத்து, ராகுல் டிராவிட்டை விக்கெட் கீப்பராக்கினார் அப்போதைய கேப்டன் கங்குலி. ராகுல் டிராவிட் அணிக்காக எதையும் செய்ய தயாரானவர் மற்றும் திறமையானவர் என்பதால், டிராவிட் 2003 உலக கோப்பையில் மட்டுமல்லாது அதன்பின்னர் தோனி அணியில் இடம்பிடிக்கும் வரை அவரே விக்கெட் கீப்பராக இருந்தார். 

அதேபோல இப்போது ராகுலும் விக்கெட் கீப்பிங் உட்பட அணி நிர்வாகம் வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்று செயல்படுகிறார் ராகுல். எனவே ராகுல் டிராவிட்டுடன் கேஎல் ராகுல் ஒப்பிடப்படுகிறார். 

இந்நிலையில், ரிஷப் பண்ட்டை ஓரங்கட்டிவிட்டு ராகுல் கீப்பிங் செய்வது குறித்து பேசிய முன்னாள் கேப்டன் கபில் தேவ், டிராவிட் முன்பு விக்கெட் கீப்பிங் செய்திருக்கிறார். ஆனால் இந்த காலத்திற்கு அதெல்லாம் ஒத்துவராது. உண்மையான, அசலான விக்கெட் கீப்பர் தான் இந்த காலக்கட்டத்தில் விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டும். ஒரு குறிப்பிட்ட பொறுப்பை அதன் தொழில்முறை நபரிடம் கொடுக்க வேண்டுமே தவிர, அதை சமாளிக்கக்கூடியவரிடம் கொடுக்கக்கூடாது. அட்ஜஸ்ட் செய்ய வேண்டிய அவசியமில்லை. (அதாவது விக்கெட் கீப்பர் என்று ஒருவர்(ரிஷப்) இருக்கும் நிலையில், ராகுலை வைத்து அட்ஜஸ்ட் செய்ய வேண்டிய அவசியமில்லை என்கிறார்). ஆனால் அணி நிர்வாகம் வேறு மாதிரி சிந்திக்கிறது என்று நினைக்கிறேன் என்று கபில் தேவ் தெரிவித்தார். 
 

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »