Press "Enter" to skip to content

ரஜினியின் சிஏஏ கருத்து… இப்படி பேசலமா..? ரஜினி மக்கள் இயக்க இஸ்லாமிய நிர்வாகிகள் குமுறல்?

சிஏஏ குறித்து நடிகர் ரஜினி தெரிவித்த கருத்துகளால் ரஜினி மக்கள் இயக்கத்தில் உள்ள இஸ்லாமிய நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக கருத்தே தெரிவிக்காமல் இருந்த நடிகர் ரஜினி, சில தினங்களுக்கு முன்பு அது குறித்து கருத்து தெரிவித்தார்.  “சிஏஏ தொடர்பாக மத்திய அரசு ஏற்கெனவே தெளிவாகக் கூறிவிட்டது. அதனால் இந்திய மக்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று. பிற நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை கொடுப்பதா வேண்டாமா என்பதே தற்போதைய பிரச்னை. இஸ்லாமியர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் கிடையாது, சில அரசியல் கட்சியினர் தங்கள் சுயலாபத்துக்காக இந்தப் பிரச்னையைத் தூண்டி விடுகின்றனர். அதற்கு மதபோதகர்களும் துணை செல்கிறார்கள்.
முக்கியமாக இது இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகச் சிலர் பீதி கிளப்பிவிடுகின்றனர். இந்தியப் பிரிவினைவாத காலத்தில், சில இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும் என நினைத்து அங்கு சென்றார்கள். ஆனால், இங்கேயே இருக்கும் இஸ்லாமியர்கள், `இதுதான் நம் நாடு, நம் ஜென்ம பூமி, வாழ்ந்தாலும் செத்தாலும் இங்குதான்’ என்று நினைத்து இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை எப்படி வெளியே அனுப்புவார்கள்? அவர்களை வெளியே அனுப்ப நினைத்தால், முதல் ஆளாக இந்த ரஜினி குரல் கொடுப்பான்” என்று பேசினார்.
ரஜினியின் இந்தக் கருத்துக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. முக்கியமாக இஸ்லாமிய அமைப்புகளும் கட்சிகளும் ரஜினிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. ரஜினி பாஜகவின் குரலாக ஒலிக்கிறார் என்று உலமாக்கள் சபையும் கண்டனம் தெரிவித்தது. ஏனென்றால், சிஏஏ-வுக்கு எதிரான போராட்டங்களில் இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் பங்கேற்றுவருகிறார்கள். இதனால், ரஜினியின் கருத்தை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.


இதில் இன்னொரு நிகழ்வாக, ரஜினி மக்கள் இயக்கத்தில் உள்ள இஸ்லாமிய நிர்வாகிகளே கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக அந்த இயக்கத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல விஷயங்களில் ரஜினி தெரிவிக்கும் கருத்துகள், பாஜக கருத்துகளோடு ஒத்துப்போவதால், அவர் பாஜகவின் ஊதுகுழல் என்றே எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. இந்நிலையில் சிஏஏ  தொடர்பாக ரஜினி தெரிவித்த கருத்தால், ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள இஸ்லாமிய நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கும் தகவல்கள் கசிந்துள்ளன. இதுதொடர்பாக இஸ்லாமிய நிர்வாகிகள் தங்களுக்குள் போன் போட்டு புலம்பத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ரஜினி மக்கள் இயக்கத்தில் பல ஆண்டுகளாக உள்ள இஸ்லாமிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், “தலைவர் பாஜகவின் ஆள் என்று தமிழகத்தில் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்துவருகின்றன. அதை முறியடிக்கவே நாங்கள் போராடுகிறோம். எங்கள் சமுதாய மக்களிடம் ரஜினி குறித்து பேசப்போனால், அவர் பாஜகவோட ஆள் என்று சொல்லிவிடுகிறார்கள். அவர்களுக்கு புரிய வைப்பதற்கே பெரும் பாடுபட வேண்டியுள்ளது. ஏற்கனவே தலைவரை நாங்கள் சந்தித்தபோது, பாஜக ஆள் என்ற முத்திரை குறித்து எடுத்துச் சொன்னோம். “நான் பாஜக ஆள் கிடையாது. அதெல்லாம் நடக்கவும் நடக்காது” என்று தலைவர் உறுதியாகச் சொன்னார்.
ஆனால், பல சந்தர்ப்பங்களில் தலைவர் தெரிவிக்கும் கருத்துகள் பாஜகவோடு ஒத்துப்போவதால், எங்கள் சமுதாய மக்கள் ரஜினியை பாஜக ஆளாகவே பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். சிஏஏ குறித்து தலைவர் சொன்ன கருத்துக்கு பிறகு எங்கள் சமுதாய மக்களை எங்களால் எதிர்கொள்ளவே முடியவில்லை. அதனால், என்ன செய்வதென்றே  தெரியவில்லை. இங்கே திமுக, அதிமுக என இரு பெரும் கட்சிகளை எதிர்த்து களம் காண வேண்டியிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கிறது. இதுவரை தலைவருக்காக நாங்கள் பொறுத்துவிட்டோம். தேர்தலுக்கு பிறகு என்ன நடக்கிறது என்று பார்த்த பிறகு எங்கள் வேலையைப்  பார்க்க செல்வோம்” என்று தெரிவித்தார்.  

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »