Press "Enter" to skip to content

கடைசி பந்தில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி.. பரபரப்பான டி20 போட்டியில் பட்டைய கிளப்பிய லுங்கி இங்கிடி

இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்கள் நடந்து முடிந்த நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்காவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவரில் 177 ரன்கள் அடித்தது. 

தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக இறங்கிய டெம்பா பவுமாவும் கேப்டன் குயிண்டன் டி காக்கும் அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 4 ஓவரில் 48 ரன்களை சேர்த்தனர். குயிண்டன் டி காக் 15 பந்தில் 31 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் பவுமாவுடன் ஜோடி சேர்ந்த வாண்டெர் டசனும் அடித்து ஆடி ஸ்கோர் செய்தார். பவுமாவும் டசனும் இணைந்து அதிரடியாக ஆடி வேகமாக ஸ்கோரை உயர்த்தினர். இவர்களின் அதிரடியால் 11 ஓவருக்கே 110 ரன்களை கடந்தது தென்னாப்பிரிக்க அணி. டசன் 26 பந்தில் 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதற்கு அடுத்த 12வது ஓவரில் பவுமா 27 பந்தில் 43 ரன்களுக்கு அவுட்டானார். அதன்பின்னர் டேவிட் மில்லர், ஸ்மட்ஸ், ஃபெலுக்வாயோ ஆகியோர் அதிரடியாக ஆடவில்லை. பந்துக்கு நிகரான ரன் மட்டுமே அடித்ததால், ரன் வேகம் குறைந்தது. அதனால் 20 ஓவரில் தென்னாப்பிரிக்க அணி 177 ரன்கள் மட்டுமே அடித்தது. 

178 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராயும் ஜோஸ் பட்லரும் களமிறங்கினர். பட்லர் வெறும் 19 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ராயுடன் பேர்ஸ்டோ ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய ஜேசன் ராய், தென்னாப்பிரிக்க அணியின் பவுலிங்கை தெறிக்கவிட்டார். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். ஸ்மட்ஸ் வீசிய நான்காவது ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடித்தார். அடுத்த ஓவரில் பேர்ஸ்டோ 2 பவுண்டரி அடிக்க, பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் ராய் ஒரு சிக்ஸரும் பவுண்டரியும் அடிக்க, 6 ஓவரிலேயே 68 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி. 

பேர்ஸ்டோ 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ராய், 38 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 70 ரன்களை விளாசி 15வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் அவுட்டாகும்போது அணியின் ஸ்கோர் 14.2 ஓவரில் 132 ரன்கள். எனவே எஞ்சிய 34 பந்துகளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு வெறும் 46 ரன்கள் மட்டுமே தேவை. 

எனவே எளிதாக வென்றிருக்க வேண்டிய இந்த போட்டியை இங்கிலாந்து வீரர்களின் சொதப்பலான பேட்டிங்கால் அந்த அணி தவறவிட்டது. 15வது ஓவரின் இரண்டாவது பந்தில் ராய் அவுட்டாக, அதற்கடுத்த ஓவரில் டென்லி, 18வது ஓவரில் ஸ்டொக்ஸ், 19வது ஓவரில் கேப்டன் மோர்கன் என ஒரு ஓவருக்கு ஒரு வீரர் ஆட்டமிழந்தார். 

கடைசி 2 ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19வது ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்த கேப்டன் மோர்கன், அந்த ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவை. பரபரப்பான கட்டத்தில், அந்த கடைசி ஓவரை லுங்கி இங்கிடி வீசினார். கடைசி ஓவரை அபாரமாக வீசி வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார் லுங்கி இங்கிடி.

கடைசி ஓவரின் முதல் பந்தில் 2 ரன்கள் அடித்த டாம் கரன், இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார். மூன்றாவது பந்தில் ரன்னே அடிக்காத மொயின் அலி, நான்காவது பந்தில் 2 ரன்கள் அடித்து, ஐந்தாவது பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த பந்தை அடித்துவிட்டு, ஒரு ரன்னை ஓடி முடித்து, போட்டியை டையாவது செய்துவிட வேண்டும் என்று இரண்டாவது ரன் ஓடிய அடில் ரஷீத் ரன் அவுட்டானார். அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே இங்கிலாந்து அணி அடித்ததையடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்க அணி. 

Also Read – ராகுல் ரன் ஓடும்போது வேண்டுமென்றே குறுக்கே வந்த ஜேம்ஸ் நீஷம்.. செம கடுப்பான ராகுல்.. வீடியோ

கடைசி ஓவரில் இங்கிலாந்தை 7 ரன்கள் அடிக்கவிடாமல் தடுத்ததுடன், 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த லுங்கி இங்கிடி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »