Press "Enter" to skip to content

டெல்லி வன்முறை : ரூ. 80 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் திருட்டு

டெல்லியில் நேற்று நடைபெற்ற வன்முறையின்போது சந்த்பாக் பகுதியில் இருந்த ஒரு மதுக்கடையில் இருந்து சுமார் 80 லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் திருடப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது.

வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே நேற்றுவரை நடந்த மோதல்களில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 130-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த மோதல் சம்பவங்களின் போது கடைகள், கார்கள் என தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் வன்முறையாளர்கள் தீவைத்து கொளுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வடகிழக்கு டெல்லியில் உள்ள சந்த்பாக் பகுதியில் நேற்று போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் இருந்த ஒரு மதுபானக்கடைக்குள் புகுந்த கலவரக்காரர்கள் அங்கிருந்த டிவி, கண்காணிப்பு கேமராக்கள், டேபிள், நாற்காலி என தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் அடித்து நொறுக்கினர். 

பின்னர் கடையில் இருந்த பீர், ஓயின் உள்ளிட்ட மதுபானங்கள் அனைத்தையும் கலவரக்காரர்கள் கொள்ளையடித்து சென்றனர். கொள்ளையடிக்கப்பட்ட மதுபானங்களின் மதிப்பு சுமார் 80 லட்ச ரூபாய் என்றும் இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது எனவும் அந்த மதுக்கடையின் மேலாளர் தெரிவித்துள்ளார்.  

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »