Press "Enter" to skip to content

கிராமப் புறங்களில் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் தொடங்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு

சரக்கு வாகன டிரைவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, கிராமப் புறங்களில் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி:

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை மந்திரி வி.கே.சிங், டெல்லியில், சாலை பாதுகாப்பு தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:-

ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் 23 ஆயிரம் பேர் பலியாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 15 ஆயிரம்பேர் சரக்கு வாகன டிரைவர்கள் ஆவர். 10-ல் 9 சரக்கு வாகன டிரைவர்கள், ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு முன்பு, முறையான ஓட்டுனர் பயிற்சி பெறவில்லை.

வருங்காலத்தில், சரக்கு வாகனங்கள் மூலமான சரக்கு போக்குவரத்து அதிகரிக்க உள்ளது. ஆகவே, அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகள் அவசியம். இதை கருத்திற்கொண்டு, சரக்கு வாகன டிரைவர்களுக்கு கிராமப் புறங்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை மத்திய அரசு தொடங்க உள்ளது. அதில், சரக்கு வாகன டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து கற்பிக்கப்படும்.

சரக்கு வாகனங்கள் ஓட்டுவது, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் சிறப்பான பணியாக கருதப்படுகிறது. அங்கெல்லாம் படித்த, நன்கு பயிற்சி பெற்ற டிரைவர்கள்தான் இத்தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

இந்தியாவை பொறுத்தவரை, பெரும்பாலான சரக்கு வாகன டிரைவர்கள், இத்தொழிலில் திருப்தி இல்லாமலேயே ஈடுபடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சாலை பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டம், இதற்கான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இச்சட்டத்தை அமல்படுத்த எல்லா மாநில அரசுகளும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »