Press "Enter" to skip to content

அனைவருக்கும் நீதி கிடைக்க முன்னுரிமை – பிரதமர் மோடி பேச்சு

அனைவருக்கும் நீதி கிடைக்க அரசு முன்னுரிமை அளிப்பதாக மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி கூறினார்.

பிரயாக்ராஜ்:

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் (அலகாபாத்) மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. அங்குள்ள அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் மோடி, உத்தரபிரதேச கவர்னர் ஆனந்திபென் பட்டேல், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:-

மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களின் நலனில் அரசு மிகுந்த அக்கறை காட்டுகிறது. முந்தைய அரசாங்கங்கள் மாற்றுத்திறனாளிகளின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. அப்போது பதவியில் இருந்தவர்கள் தங்கள் பிரச்சினைகளை எப்படி தீர்ப்பது என்பதிலேயே கவனம் செலுத்தினார்கள். மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக அவர்கள் சில முகாம்களையே நடத்தினர். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 9 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்டு, அவர்களுக்கு ஏராளமான உதவிகளும், உபகரணங்களும் வழங்கப்பட்டன.

மாற்றுத்திறனாளிகளுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 700-க்கும் அதிகமான ரெயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. புதிய இந்தியாவை உருவாக்குவதில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பு அவசியம் ஆகும். மூத்த குடிமக்களின் நலனுக்காகவும் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறோம். நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்களின் பலன்களும், நீதியும் கிடைப்பதை உறுதி செய்வது அரசின் கடமை ஆகும். எனவே இதற்கு நாங்கள் முன்னுரிமை அளித்து வருகிறோம்.இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். இந்த விழாவையொட்டி, மூன்று சக்கர நாற்காலிகளில் 600 மாற்றுத்திறனாளிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இதே விழாவையொட்டி நேற்று முன்தினம் அங்கு 300 மூன்று சக்கர வாகனங்களில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட 1.8 கிலோ மீட்டர் நீள அணிவகுப்பு நடைபெற்றது. இவை கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உத்தரபிரதேசத்தில் உள்ள பண்டல்காண்ட் என்ற இடத்தில் இருந்து சித்ரகூட், பண்டா, ஹமிர்பூர், ஜலான் மாவட்டங்கள் வழியாக டெல்லிக்கு ரூ.14 ஆயிரத்து 849 கோடி செலவில் 296 கிலோ மீட்டர் நீள அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு சித்ரகூட்டில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். விழாவில், நாடு முழுவதும் 10 ஆயிரம் விவசாயிகள் உற்பத்தி பொருள் அமைப்புகளையும் மோடி தொடங்கி வைத்தார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »