Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): கட்டுக்கதைகளும் உண்மைகளும்

கொரோனா வைரஸ் எதனால் பரவுகிறது, யாரை பாதிக்கும் என்பது பற்றிய கட்டுக்கதைகளையும், உண்மைகளையும் அறிந்து கொள்ளலாம்.

கட்டுக்கதை: வைட்டமின் “சி” மாத்திரைகள் சாப்பிட்டால் கொரோனா பாதிப்பு வராது

உண்மை : வைட்டமின் “சி” மாத்திரைகள் கோவிட்-19 என்ற கொரோனா நோய்த்தொற்றை தடுக்கும் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் ஆராய்ச்சியாளர்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் வைட்டமின் “சி” நிறைந்த உணவுகள் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கட்டுக்கதை: குழந்தைகளை கொரோனா வைரஸ் தாக்காது.

உண்மை: குழந்தைகளையும் நிச்சயமாக கொரோனா வைரஸ் தாக்கும். ஆரம்ப அறிக்கைகள் பெரியவர்களுடன் ஒப்பிடும்போது குழந்தைகளில் குறைவான பாதிப்பே இருந்ததாக கூறப்பட்டது. இருப்பினும் சமீபத்திய ஆய்வுகளின்படி குழந்தைகளுக்கு கொரோனா தொற்று அதிக அளவில் பரவுகிறது.

கட்டுக்கதை: கொரோனா வைரசை குணப்படுத்த ஒரு தடுப்பூசி உள்ளது.

உண்மை : தற்போது வரை கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. விஞ்ஞானிகள் ஏற்கனவே தீவிரமாக தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர். ஆனால் மனிதர்களுக்கு பாதுகாப்பான மற்றும் பயனளிக்கும் ஒரு தடுப்பூசியை உருவாக்க பல மாதங்கள் ஆகும்.

கட்டுக்கதை: நிறைய தண்ணீர் குடிப்பதால் கொரோனா பாதிப்பு வராது. ஒவ்வொரு 15 நிமிடமும் தண்ணீர் குடிப்பதால் உங்கள் தொண்டையில் உள்ள எந்த வைரசும் உங்கள் வயிற்றுக்கு சென்று விடும். அங்குள்ள அமிலம் அதைக் கொல்லும் என்று சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வைரலாக பரவுகிறது.

உண்மை : இது தவறு. இதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. ஆனால் சாதாரணமாக தண்ணீர் குடிப்பது உடல் நலத்துக்கு நன்மை விளைக்கும்.

கட்டுக்கதை: அதிக வெப்பம் அல்லது வெயிலில் கொரோனா பரவாது.

உண்மை : உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இதுவரை கிடைத்த சான்றுகளிலிருந்து, கொரோனா வைரஸ் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை உள்ள அனைத்து பகுதிகளிலும் பரவி உள்ளது.

கட்டுக்கதை: வயதானவர்களை மட்டுமே கொரோனா தாக்குகிறது.

உண்மை : கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் எல்லா வயதினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வயதானவர்கள் மற்றும் முன்பே ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

கட்டுக்கதை: வெப்ப அளவுகோல் (தெர்மல் ஸ்கேனர்) வைத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து விடலாம்.

உண்மை : வெப்ப அளவுகோல் (தெர்மல் ஸ்கேனர்) மனிதன் உடலில் உள்ள வெப்பத்தை மட்டுமே அளவிட முடியும். இதன் மூலம் ஒருவருக்கு காய்ச்சல் இருக்கின்றதா என்று கண்டறியப்படும்.

கட்டுக்கதை: வெந்நீரில் குளித்தால் கொரோனா பாதிப்பு வராது.

உண்மை : சூடான குளியல் எடுப்பது கொரோனா பரவுவதை தடுக்காது. ஏனெனில் வெந்நீர் குளியல் அல்லது சாதாரண குளியலின்போது உங்களது உடல் வெப்பநிலை 36.5 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் என்ற நிலையிலேயே இருக்கும். எனவே அவ்வப்போது கைகளை கழுவி சுத்தமாக வைத்திருப்பதுதான் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள சிறந்த வழி.

கட்டுக்கதை: தபால் மற்றும் கொரியர் மூலம் கொரோனா பரவுகிறது.

உண்மை : சுற்றுப்புற வெப்பநிலையில் நாட்கள் அல்லது வாரங்களுக்கு அனுப்பப்படும் பொருட்கள் அல்லது கொரியர்கள் ஆகியவற்றிலிருந்து கொரோனா பரவுவதற்கான ஆபத்து மிகக் குறைவு.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »