Press "Enter" to skip to content

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியாவில் ஆளானோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது. கொரோனா தொடர்பான சவால்களை சந்திக்க ஏற்பாடுகள் தயாராகின்றன.

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இருந்து 21 நாள் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. ஆனாலும், கொரோனா வைரஸ் பரவுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமைக்கு பின்னர் இந்தியாவில் 149 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதித்துள்ளது உறுதியாகி உள்ளது. 2 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

சமூக அளவிலான பரவலுக்கு கொரோனா வைரஸ் செல்லக்கூடும் என்ற அச்சம் வலுத்து வரும் நிலையில், இனி வரக்கூடிய சவால்களை சந்திப்பதற்கு தயார் ஆவதற்கான ஏற்பாடுகளில் அரசு முனைப்பாக உள்ளது. இதற்காக ராணுவத்தின் 28 ஆஸ்பத்திரிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 5 ஆஸ்பத்திரிகளில் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

பாரத மின்னணு நிறுவனம், செயற்கை சுவாச கருவிகளை தயாரித்து அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. டி.ஆர்.டி.ஓ. என்னும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பு கவச கருவிகள் தயாரிப்பதுடன், சானிடைசர் உள்ளிட்டவற்றையும் வினியோகித்து வருகிறது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பு அடைந்தோருக்காக படுக்கைகளை ஒதுக்கி வைக்க ஏற்பாடு செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »