Press "Enter" to skip to content

ஒரு வழியாக கிளம்பினார்… டெல்லி விமான நிலையம்டில் இருந்து 55 நாட்களுக்கு பிறகு சென்ற ஜெர்மானியர்

விசா சிக்கல் காரணமாக டெல்லி ஏர்போர்ட்டில் 55 நாட்களாக தங்கியிருந்த ஜெர்மானியர், ஒரு வழியாக நெதர்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

புதுடெல்லி:

ஜெர்மனியை சேர்ந்தவர் எட்கார்ட் ஜீபாட் (வயது 40). இவர் மீது ஜெர்மனியில் குற்ற வழக்குகள் உள்ள நிலையில் தலைமறைவானார். இதனால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் இவர் மார்ச் 18 -ம் தேதி வியட்நாமின் ஹனோய் நகரில் இருந்து, டெல்லி வழியாக துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு சென்று கொண்டிருந்தார். 

டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது, அன்றைய தினம் துருக்கியில் இருந்து வரும் விமானங்கள் மற்றும் துருக்கிக்கு செல்லும் அனைத்து விமானங்களையும் கொரோனா அச்சறுத்தலால் மத்திய அரசு ரத்து செய்தது. 

அதன்பிறகு 4 நாட்களுக்குள் அனைத்து சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து நாடு தழுவிய அளவில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. இதனால் சர்வதேச விமான போக்குவரத்து அடியோடு முடக்கப்பட்டது. எனவே வெளிநாட்டு பயணிகள் ஏராளமானோர் இந்தியாவில் சிக்கினர். அவர்களை மத்திய அரசு அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தது.

ஆனால் ஜீபாட் தேடப்படும் குற்றவாளி என்பதால் அவரை ஏற்றுக்கொள்ள ஜெர்மனி அரசு மறுத்துவிட்டது. மேலும் அவர் தேடப்படும் குற்றவாளி என்பதால் இந்திய விசாவுக்கு விண்ணப்பிக்கவோ, இந்தியாவுக்குள் நுழையவோ முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும் அவரை காவலில் எடுக்க முடியாத நிலையில் உள்ளதாக ஜெர்மனி அரசு தெரிவித்தது. எனவே ஜீபாட் கடந்த மார்ச் 18-ந் தேதி முதல்  டெல்லி விமான நிலையத்திலேயே பயணிகள் தங்கும் இடத்தில் தங்கினார்.

விமான நிலைய விதிகளின் படி ஒரு பயணி ஒருநாள் மட்டுமே விமான நிலையத்தில் தங்க முடியும். ஆனால் ஜீபாட்டை தொடர்ந்து இங்கு தங்க அனுமதிப்பதை தவிர வேறு வழியில்லாத நிலை ஏற்பட்டது. அவர் தனது செலவை தானே கவனித்து கொண்டார். விமான நிலையத்தில் உள்ள கேண்டீன்களில் உணவு வாங்கி சாப்பிட்டுள்ளர். அவருக்கு அதிகாரிகள் சில உதவிகளை செய்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த வாரம் துருக்கி அரசு இந்தியாவில் சிக்கி உள்ளவர்களை அழைத்துச் செல்ல சிறப்பு விமானம் ஒன்றை அனுப்பியது. ஆனால் அதில் தங்கள் நாட்டு குடிமக்களை மட்டுமே அழைத்துச்செல்ல முடியும் என கூறி ஜீபாட்டை அழைத்து செல்ல மறுத்துவிட்டது. பின்னர் ஒருவழியாக 55 நாட்களுக்கு பிறகு  நேற்று அதிகாலை டெல்லியில் இருந்து நெதர்லாந்து சென்ற சிறப்பு விமானத்தில் அவர் புறப்பட்டுச் சென்றார். 

முன்னதாக ஜீபாட்டுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் அவருக்கு நோய்த்தொற்று எதுவும் இல்லை என தெரியவந்தது. இந்தியாவை விட்டு வெளியேறுவதற்காக வழங்கப்பட்ட படிவத்தில், இந்தியாவில் தங்கியிருந்த இடம், ‘டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்’ என்றும், தங்கியிருந்த வீடு ‘3-வது முனையம்’ என்றும் ஜீபாட் பதிவு செய்ததாக அதிகாரி ஒருவர் கூறினார். 

டெல்லி விமான நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘விமானம் கிடைத்தால் இந்தியாவை விட்டு வெளியேற திட்டமிட்டிருப்பதாக ஜீபாட் கூறினார். அதன்படி அதிகாலை 3 மணியளவில் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிற்கு இயக்கப்பட்ட சிறப்பு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். அந்த விமானத்தில் மொத்தம் 292 பயணிகள் இருந்தனர். ஜீபாட் ஐரோப்பா செல்ல தகுதியானவர் என்பதால், அவர் வெளியேற அனுமதிக்கப்பட்டார். அவரது டிக்கெட் கட்டணம் ரூ.43,000. அந்த கட்டணத்தை அவரே செலுத்தினார்.” என குறிப்பிட்டார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »