Press "Enter" to skip to content

அத்தியாவசிய மருந்துகளை வீடு தேடி சென்று வழங்குங்கள்- மாநிலங்களுக்கு மத்திய அரசு யோசனை

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய மருந்துகளை வீடு தேடி சென்று வழங்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு யோசனை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

கொரோனா சமயத்திலும், கொரோனாவுக்கு பிறகும் பச்சிளம் குழந்தைகள், குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர், கர்ப்பிணிகள், தாய்மார்கள் ஆகியோர் நலம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியா ஏராளமான பச்சிளம் குழந்தைகளையும், வளர் இளம் பருவத்தினரையும் கொண்டது. எனவே, கொரோனா சிகிச்சைக்கு முன்னுரிமை கொடுப்பதுபோல், எளிதில் நோய் தாக்க வாய்ப்புள்ள மேற்கண்ட பிரிவினரின் சுகாதார பணிகளிலும் அக்கறை செலுத்த வேண்டும்.

அந்தவகையில், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், கொரோனாவால் பாதித்தவர்களோ, பாதிக்காதவர்களோ யாராக இருந்தாலும், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள், குழந்தைகள், இளம்பெண்கள் உள்ளிட்டோருக்கு தேவையான கால்சியம் மாத்திரை, இரும்புச்சத்து மாத்திரை, போலிக் ஆசிட் மாத்திரை, ஜிங்க் மாத்திரை, ஓ.ஆர்.எஸ்., கருத்தடை மாத்திரை போன்ற அத்தியாவசிய மருந்துகளை வீடு தேடி சென்று வழங்க வேண்டும்.

அப்போதுதான், ஊரடங்கிலும் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படாது.

ஆஸ்பத்திரிகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடக்க வேண்டும். ஆனால், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தடுப்பூசி போடக்கூடாது. இருப்பினும், கட்டுப்பாட்டு பகுதியில் இருப்பவர், தன் குழந்தைக்கு தடுப்பூசி போட ஆஸ்பத்திரிக்கு வந்தால், அவரை துரத்தக்கூடாது.

வயிற்றுப்போக்கு, குடற்புழு, ரத்த சோகை ஆகியவற்றை குணப்படுத்தும் முகாம்களை ஆங்காங்கே நடத்த வேண்டும்.

கொரோனா சிகிச்சைகளை காரணம் காட்டி, இவற்றை தவிர்க்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »