Press "Enter" to skip to content

தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பிய பிறகு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாம் – மு.க.ஸ்டாலின்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பிய பிறகு தேர்வை நடத்தலாம் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை:

கொரோனா பரவலுக்கு காரணமாகி விடும் என்பதால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பிய பிறகு தேர்வை நடத்தலாம் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலக அளவில் கொரோனா நோய் தொற்று பரவி வருவதில் இந்தியா 6-வது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டின் நிலைமை நாளுக்கு நாள் படுமோசமாக போய்க்கொண்டிருக்கிறது. நாள்தோறும் ஆயிரத்தையும் கடந்து நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தலைநகர் சென்னை, ஒட்டுமொத்த மாநிலத்தையும் அச்சப்பட வைக்கும் நகரமாக மாறியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். சென்னையில் பரவி வரும் நோய் தொற்று என்பது, சமூகத் தொற்று எனப்படும் கட்டத்தை எட்டியிருப்பதாக மருத்துவர்கள் கவலைப்படுகின்றனர்.

தமிழகத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து விட்டது. இறப்பு எண்ணிக்கையும் 250-க்கும் அதிகமாக சென்றுவிட்டது. கோவிட் 19 வைரஸ் தற்போது அதிக வீரியம் கொண்ட கிளேட் ஏ 3 ஐ ஆக உருமாறி பரவி வருகிறது என்கிற தகவல் மக்கள் அனைவரையும் மேலும் அச்சப்பட வைத்துள்ளது.

இந்தநிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது என்பது மாணவ-மாணவிகளுக்கு மட்டுமின்றி அவர்களுடைய பெற்றோர், குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் நோய்த்தொற்று பரவ காரணமாகிவிடும் என்பதை மருத்துவர்களும், கல்வியாளர்களும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.ஹால் டிக்கெட் வாங்குவதற்கு பஸ்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பில் இருந்து பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் என அரசு சொல்கின்ற அனைத்துமே நோய்த்தொற்று பரவலுக்கு வலிந்து இடமளிக்கின்ற செயல்பாடுகளே ஆகும்.

கிராமப்புற ஏழை மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் படிப்போர் என பலரும் போதிய தகவல் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத நிலையில், அவர்களுக்கு ‘ஆன்-லைன்‘ வகுப்புகள் நடத்தி பாடம் சொல்லிக் கொடுக்கிறோம் என்பது பாகுபாட்டை வளர்க்கின்ற ஏமாற்றுத்தனம் ஆகும்.

கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு எங்கள் பிள்ளைகளுக்கு 10-ம் வகுப்பு தேர்வு நடத்த வேண்டும் என்று மாணவரின் தாய் ஒருவர் பேசும் வீடியோ காட்சியும் தற்போது சமூக வலைத்தளத்திலும் பரவி வருகிறது. சிரம் அறுத்தல் வேந்தனுக்கு பொழுதுபோக்கும் சிறிய கதை, நமக்கோ உயிரின் வாதை‘ என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கவிதை வரிகள் மாணவர்களுக்குச் சொல்லித் தரப்படுகின்றன. அதன் பொருளை தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் ஆட்சியாளர்கள்தான். எனவே 10-ம் வகுப்பு பொது தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி மாணவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் எந்தவித ஆபத்தும் இல்லை என்ற நம்பிக்கையான, பாதுகாப்பான நிலை உருவான பிறகு தேர்வை நடத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »