Press "Enter" to skip to content

பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர்

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார்.

சேலம்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மொத்த நீளம் 1700 மீட்டர்களாகும். அணையின் உயரம் 120 அடி, மொத்த கொள்ளளவு 93.4 டி.எம்.சி.யாகும்.

காவிரி டெல்டாவின் 12 மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதிக்கு மேட்டூர் அணையையே நம்பி உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12-ம்தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இதுவரை 15 முறை ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் போதிய நீர் இருந்ததால் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

அதன்பிறகு கடந்த 12 ஆண்டுகளில் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால், குறித்த தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது. இந்தநிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாகவும், நீர் இருப்பு 64.85 டி.எம்.சி.யாகவும் உள்ளது. இது, 50 நாட்கள் வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட போதுமானது என்பதால் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார். மேட்டூர் அணை திறப்பால், சாகுபடி பணிகளில் டெல்டா விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் 12 ஆண்டுகளுக்கு பிறகு குறித்த தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டதால், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »