Press "Enter" to skip to content

சென்னை தலைமை செயலகத்தில் 138 ஊழியர்களுக்கு கொரோனா

சென்னை தலைமை செயலகத்தில் 138 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தொற்று ஊருடுவியது. அங்கு கடந்த 8-ந்தேதி நிலவரப்படி 44 ஊழியர்கள் கொரோனா பிடியில் சிக்கி இருந்தனர். இதைத்தொடர்ந்து 250 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 138 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் மருத்துவமனைக்கு போக விரும்பாமல் வீட்டு தனிமையில் இருக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து அலுவலகங்களும் இன்றும் (சனிக்கிழமை), நாளையும்(ஞாயிற்றுக்கிழமை) மூடப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற உள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து துறை செயலாளர்கள், அமைச்சர்களின் தனி உதவியாளர்கள், முதல்-அமைச்சர் அலுவலகம், என்.ஐ.சி. இயக்குனர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர், தலைமை செயலக ஊழியர் கூட்டுறவு சங்கம் ஆகியோருக்கு பொதுத்துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) பி.செந்தில்குமார் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் அடிப்படையில் கடந்த 10-ந் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணை ஒன்றை பிறப்பித்தது. அதன்படி, ஒவ்வொரு அரசு அலுவலகங்களும் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முழு அளவில் மேற்கொள்வதற்காக இரண்டாம் சனிக்கிழமைகளில் மூடப்பட வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளிலும் சுத்திகரிப்புப் பணி நடத்தப்பட வேண்டும். எனவே 13-ந் தேதி (இன்று) மற்றும் 14-ந் தேதி (நாளை) ஆகிய தினங்களில் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஒட்டுமொத்த தலைமை செயலக கட்டிடங்களும் 48 மணி நேரத்துக்கு மூடப்படும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

எனவே அனைத்து துறைகளின் அலுவலக நடைமுறைப்பிரிவும் (ஓ.பி.) அந்தந்த துறை செயலாளர்களின் அரங்கங்கள், அறைகள், சேம்பர்களுக்கான சாவிகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நாட்களிலும், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தலைமைச் செயலகத்துக்கு வந்து சாவிகளைப் பெற்று அங்குள்ள அலுவலகங்களைத் திறந்து தூய்மைப் பணியில் ஈடுபடுவார்கள். அனைத்து அறைகளிலும் முழுமையாக கிருமிநாசினி தெளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு தலைமை செயலக சங்கத் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி கூறியதாவது:-

கொரோனா தொற்று தடுப்புக்கு சில நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ஆனாலும் தலைமைச் செயலகத்தில் சமூக இடைவெளிக்கு வழிவகுக்கும் வகையில், 50 சதவீத பணியாளரின் எண்ணிக்கையை 33 சதவீதமாக குறைக்க வேண்டும். இரண்டாம் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அரசு அலுவலகங்களை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை அதிகரிக்க வேண்டும். தலைமைச் செயலகத்தில் ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தப் பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »