Press "Enter" to skip to content

சென்னையில் மத்திய குழு ஆய்வு- 11 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை

சென்னை வந்த மத்திய குழுவினர், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 11 மாவட்ட கலெக்டர்களுடன் அவர்கள் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்கள்.

சென்னை:

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.

அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும் கொரோனா பரவலின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. தமிழகத்தில் நேற்று புதிதாக 4,231 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 581 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னையில் கொரோனா பரவலின் வேகம் சற்று குறைந்து உள்ளது. நேற்று புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட 4,231 பேரில் 1,216 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இவர்களையும் சேர்த்து சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 728 ஆக உயர்ந்து இருக்கிறது.

தமிழ்நாட்டில் நேற்று கொரோனாவுக்கு 65 பேர் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,765 ஆக உயர்ந்து இருக்கிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையில், தமிழகத்துக்கான மத்திய அரசின் கண்காணிப்பு அதிகாரி ராஜேந்திர ரத்னு, மின்னணு மருத்துவ ஆவண இயக்குனர் டாக்டர் ரவீந்திரன், மத்திய நோய் பரவல் தடுப்பு நிபுணர்கள் சுகாஸ் தந்துரு, பிரவீன், ஜிப்மர் மருத்துவர்கள் ஸ்வரூப் சாகு, சதீஷ் ஆகிய 7 பேர் கொண்ட மத்திய சுகாதார குழுவினர் நேற்று முன்தினம் சென்னை வந்தனர்.

அவர்கள் நேற்று காலை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனையின் போது, கொரோனா நோய்த் தொற்றை தடுக்க தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, நோய்த் தொற்று அதிகம் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்குறித்து மத்திய குழுவினரிடம் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரும் மற்றும் அதிகாரிகளும் விளக்கி கூறினார்கள்.

அதன்பிறகு மத்திய குழுவினர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்தனர்.

பின்னர், சென்னை புளியந்தோப்பு கேசவன் பிள்ளை பூங்கா குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள கொரோனா நலவாழ்வு மையத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அதன்பிறகு பட்டாளத்தில் உள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிக்கும், திரு.வி.க. நகர் மண்டலத்தில் உள்ள ஒரு சில கட்டுப்பாட்டு பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் மாலை 4 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்து, தமிழகத்தில் நோய்த் தொற்றின் நிலை, மருத்துவ வசதிகள், கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசித்தனர். அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், தேனி, ராணிப்பேட்டை, ஆகிய 11 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யமிஸ்ரா, தமிழக டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மத்திய சுகாதார குழுவினர், இன்று (வெள்ளிக்கிழமை) அயனாவரம், தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்கள்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »