Press "Enter" to skip to content

மீட்பு பணிகளில் விரைந்து செயல்பட்ட தேசிய பேரிடர் மீட்புக்குழு, மத்திய அரசுக்கு நன்றி – பினராயி விஜயன்

வெள்ள பாதிப்பு மற்றும் விமான விபத்து பணிகளை மேற்கொள்ள தகுந்த நேரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படைக்குழுவினரை அனுப்பியதற்காக பிரதமர் மோடிக்கு முதல் மந்திரி பினராயி விஜயன் நன்றி தெரிவித்தார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்திருப்பதையொட்டி ராஜமலை, பெட்டிமுடி பகுதியில் தொடர் மழை கொட்டித்தீர்த்த வண்ணம் உள்ளது. இதனால் குடியிருப்பு அருகே உள்ள கல்லார் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

கடந்த 7-ம் தேதி அதிகாலை 5 மணி அளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. 300 அடி உயரம் கொண்ட பெட்டிமுடி மலையில் 150 அடி சரிந்து ராட்சத பாறைகள் உருண்டன, மணலும் சரிந்தன. அதிகாலை நேரத்தில் வீடுகளில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த 78 பேரும் மணலுக்குள் புதைந்து விட்டனர். இதில் 3 பேர் உயிர் தப்பி வெளியே வந்து விட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 7-ம் தேதி முதல் மீட்பு பணி தொடங்கியது.

இந்தப் பணியில் தீயணைப்பு படையைச் சேர்ந்த 120 பேர், தேசிய பேரிடர் மீட்புக்குழுவை சேர்ந்த 85 பேர், சுகாதாரத் துறையினர் 100 பேர், வனத்துறையினர் 50 பேர், 200 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 7-ம் தேதி 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மண்ணுக்குள் புதைந்து பலியான 17 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கேரளா மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

இடுக்கி நிலச்சரிவில் 22 பேரை காணவில்லை. வெள்ள பாதிப்பு மீட்புப் பணிகளை மேற்கொள்ள தகுந்த நேரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படைக்குழுவினர் மத்திய அரசால் அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ராஜமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவிலும், கோழிக்கோடு விமான விபத்திலும் தீவிரமாக செயல்பட்ட தேசிய பேரிடர் மீட்புப்படை குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கேரளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு விரைவில் அறிக்கை அளிக்கப்படும் என தெரிவித்தார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »