Press "Enter" to skip to content

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு – செய்தியாளர்கள் சந்திப்பிலிருந்து வெளியேறிய டிரம்ப்

வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு நடந்ததால் செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து அதிபர் டிரம்ப் உடனடியாக வெளியேறினார்.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசியில் அமைந்துள்ளது வெள்ளை மாளிகை. அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் என்பதால் இந்த மாளிகையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். 24 மணி நேரமும் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு  இருப்பார்கள். 

இந்த சூழலில் வெள்ளை மாளிகை பகுதி அருகே ஆயுதங்களுடன் மர்ம நபர் ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட ரகசிய சேவை பாதுகாப்பு படையினர் அந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மர்ம நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, வெள்ளை மாளிகையில் தனது வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட டிரம்ப், துப்பாக்கிச்சூடு நடைபெற்றதும் பாதியில் இருந்து வெளியேறினார்.

சிறிது நேரம் கழித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த டிரம்ப், வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.  ஒரு நபரை தவிர வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆயுதங்களுடன் வந்ததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவித்தார். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »