Press "Enter" to skip to content

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி- ரனில் விக்ரமசிங்கே விலகல்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் கட்சி தலைமை பொறுப்பில் இருந்து ரனில் விக்ரமசிங்கே விலகியுள்ளார்.

கொழும்பு:

இலங்கையில் கடந்த 5-ந்தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் பொதுஜன பெரமுனா கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றது. இலங்கையில் 4 முறை பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி இந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. அந்த கட்சி 3 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளை பெற்று 4-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

இந்த நிலையில் தேர்தல் தோல்வி காரணமாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பொறுப்பை ரனில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்தார். இவர் கடந்த 1994-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றார். ஏறத்தாழ 26 ஆண்டுகள் அந்த கட்சியின் தலைவராகவும், அந்த கட்சியின் சார்பில் 4 முறை பிரதமராகவும் அவர் இருந்துள்ளார். இந்த சூழலில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தனது கட்சி மோசமான தோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து அவர் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

இந்த தகவலை கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவாசம் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். மேலும் தானும், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் 3 பேரும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக தெரிவித்தார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »